அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலம் லட்சக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் திருக்கோவில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம், லட்டு, அதிரசம், முறுக்கு  உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு திருக்கோவில் ஊழியர்கள் வைத்து ஆங்காங்கே கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு தயாரிக்கப்பட்ட பிரசாதங்கள் அனைத்தும் இன்று வரை பஞ்சாமிர்தங்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது என கூறப்படுகிறது.




இதனை கோவில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து இரவு பகலாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் கெட்டுப் போன பிரசாதங்களை பக்தர்கள் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 26 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள்  15 நாட்களுக்குள் விற்கப்பட வேண்டிய நிலையிலும் , லட்டு, முறுக்கு,  அதிரசம் போன்ற பிரசாதங்கள் தயாரிப்பு தேதி இல்லாமலும் விற்கப்படுவதால் கெட்டுப்போன வாசனை அடிப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.




இதனால் பிரசாதங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள், பக்தர்களிடம் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். பழனி உணவுத்துறை அதிகாரிகள் கோவில் நிர்வாகிகள் தயாரிக்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கலைவாணி தலைமையிலான பாதுகாப்பு குழுவினர் அனைத்து கடைகள் மற்றும் தேவஸ்தான பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு செய்த பிரசாதங்களை ஆய்வகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.




இதனை தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகமானது தைப்பூசத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வரக்கூடும். ஆகையால் அதிகளவில் பஞ்சாமிர்த தயாரிப்பு செய்து வைத்துள்ளதாகவும், பக்தர்கள் வருகை அதிகளவில் இருந்தும் பஞ்சாமிர்த விற்பனை அதிகளவில் ஆகாததால் பஞ்சாமிர்தம் தேக்கம் அடைந்து விட்டதாகவும், இதனால் விற்பனை செய்யப்பட்ட சில பிரசாதங்களில் தவறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அதனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பழநி அருகே உள்ள கள்ளிமந்தயம் கோசாலையில் குழி தோண்டி 80,000 மேற்பட்ட பஞ்சாமிர்த டப்பாக்கள் அளிக்கப்பட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை தேவஸ்தான நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.