திருச்சி காஜாமாலையை சேர்ந்த பால் வியாபாரி இக்பால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் திருச்சி காஜாமலை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். மிகுந்த ஏழ்மை நிலையில் பால் வியாபாரம் செய்து வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றேன். எனது மகன் திருச்சி டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் உள்ள காஜா மியான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த செப்டம்பர் மாதம் பள்ளி சென்று திரும்பிய எனது மகனின் உடலில் கொடூரமான தாக்குதல் காயங்கள் இருந்தது. இதுகுறித்து விசாரணை செய்தபோது பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் முருகதாஸ் வகுப்பில் நடத்திய தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கொடூரமாக தாக்கியதாக எனது மகன் கூறினான். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்தேன். ஆனால் இரவு நேரங்களில் என்னை அடிக்க வேண்டாம் என்னை அடிக்க வேண்டாம் என்று அதிகமாக குரல் எழுப்பினான். பயந்து நாங்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். பரிசோதனை செய்த மருத்துவர்கள் மகனின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவனுடைய மூளைத்திறன் 75 சதவீதமாக குறைந்துவிட்டது. மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளான் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.



 

 தற்போது வரை மூன்று லட்சத்திற்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள என்னால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே காஜாமியான் பள்ளி நிர்வாகத்தின் மீதும் எனது மகனை கொடூரமாக தாக்கிய பள்ளி ஆசிரியர் முருகதாஸ் மீதும் நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய இழப்பீடு பெற்று தர உத்தரவு பிறப்பிக்குமாறு மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜின்னா ஆஜராகி ஆசிரியர் தாக்கியதில் பள்ளி சிறுவனின்  மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்ற மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார். அதனை பார்த்த நீதிபதி இந்த வழக்கில், திருச்சி கே கே நகர் காவல் நிலைய ஆய்வாளரை எதிர்மனுதாரராக இணைத்து சம்பவம் குறித்து பள்ளியின் ஆசிரியர் முருகதாஸிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு மனு குறித்து காஜாமீயான் பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.