பழனி மலைக்கோயில் ஸ்தானீக மிராஸ் திருமஞ்சனப் பண்டாரங்களான சக்திவேல் மற்றும் ஜெயன் கருப்பையா ஆகியோர் தாங்கள் பாதுகாத்து வைத்திருந்த ஒரு தெய்வச்சிலை செப்புப் பட்டயத்தை தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தியிடம் கொடுத்து அதைப் படித்து விளக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன் அடிப்படையில் பட்டயத்தை ஆய்வு செய்த நாராயணமூர்த்தி அதுகுறித்து கூறியதாவது, இந்த தெய்வச்சிலை செப்புப் பட்டயம், செங்குந்த முதலியார்கள் சூரசம்ஹார மண்டகப்படியை ஒட்டி வழங்கிய பட்டயம் ஆகும். இந்தப் பட்டயம் 1.7 கிலோ எடையுடனும் உயரம் 18 செ.மீ. நீளம் 45 செ.மீ என்ற அளவுகளுடனும் உள்ளது. பட்டயத்தின் முன்புறம் மேலே சூரிய சந்திரர்களும் அதன் அடியில் முருகன் பிள்ளையாருடன், செங்குந்தர்களின் குலதெய்வங்களான நவவீரர்கள் கைகளில் வாள் கேடயத்துடன் பொறிக்கப்பட்டுள்ளனர்.




முருகனின் வலதுபுறம் செங்குந்தம் எனும் ஈட்டி பொறிக்கப்பட்டுள்ளது. பட்டயத்தின் பின்புறம் தமிழ் எழுத்துகள் வலதுபுறமும் வடமொழி கிரந்த எழுத்துகள் இடது புறமும் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பகுதியில் சண்முக வாத்தியாரின் பேரன் ஒரு ஓலைச்சுவடி எழுதியதாகவும் அதைப்பார்த்து நஞ்சய பண்டாரம் என்பவர் செங்குந்த முதலியார்களின் வேண்டுகோள்படி தாமிரசாசனப்பட்டயம் எழுதியதாகவும் குறிக்கப்பட்டுள்ளது. வடமொழி கிரந்தப்பகுதியில் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஸகாயம் (தண்டபாணி துணை) என்று எழுதப்பட்டுள்ளது. அதனடியில் பழநிமலை ஸ்தவராஜபண்டிதர் கையொப்பம் இட்டுள்ளார்.




தமிழ், கிரந்தம் இரண்டு எழுத்துப் பொறிப்புகளும் 6 வரிகளில் மடக்கி மடக்கி எழுதப்பட்டுள்ளன. பட்டயத்தில் எழுத மிகுந்த இடமிருந்த போதும் இவ்வாறு 6 வரிகளில் மடக்கி எழுதப்பட்டிருப்பது முருகனுக்குரிய எண் 6 என்பதால் இருக்கலாம். செப்பேடு குறிப்பிடும் சண்முகவாத்தியார் யார் என்பது தெரியவில்லை. ஓலைச்சுவடியை செப்புப் பட்டயத்தில் எழுதிய அவரின் பேரனின் பெயரையும் பட்டயம் குறிப்பிடவில்லை. ஆகவே சண்முகவாத்தியார் பேரன் ஓலைச் சுவடியில் என்ன எழுதினார் என்பதும் அதை செங்குந்த முதலியார்களின் வேண்டுகோளுக்கிணங்க நஞ்சய பண்டாரம் எவ்வாறு செப்புப் பட்டயம் எழுதினார் என்பதும் தெரியவில்லை.




தற்போதைய செங்குந்த முதலியார்களின் இந்த தெய்வங்களுடன் கூடிய பட்டயத்தை சூரசம்ஹார மண்டகப்படிக்கு எடுத்துச்செல்வது வழக்கமாக உள்ளதால், இது தொடர்பான மூல செப்புப் பட்டயம் ஒன்றை நஞ்சய பண்டாரம் எழுதி இருப்பார் என்பது புலனாகிறது. தற்போதைய பட்டயத்தின் எழுத்தமைதி கி.பி. 18ஆம் நூற்றாண்டு. ஆகவே இதற்கு முன்பு மூல செப்புப்பட்டயமும் அதற்கும் முன்பே ஓலைச் சுவடியும் இருந்திருக்க வேண்டும். அந்த இரண்டுமே தற்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆகவே செங்குந்த முதலியார்கள் பழனிமலை முருகனுக்கு அளித்த கொடை மற்றும் அது தொடர்பான கட்டளை பற்றி நம்மால் அறியமுடியவில்லை. இந்த ஆய்வின் போது ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம் மற்றும் அஜய்கிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண