பண்ணப்பட்டி அருகே யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு.


திண்டுக்கல் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான கன்னிவாடி தர்மத்துப்பட்டி பண்ணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து  சேதப்படுத்தி வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் பண்ணப்பட்டி அருகே உள்ள கருப்புன்சேர்வைக்காரன் பட்டியில் நேற்று இரவு சுமார் 11 மணிக்கு  பரமன் என்பவரது  தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து அங்கு பயிரிட்ட முருங்கை, தென்னை, தக்காளி, கத்திரி உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்ததது.




இதனால் தங்களுக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் இது பற்றி பலமுறை வனத்துறையினருக்கு  தகவல் தெரிவித்தும், தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே யானைகள் அவ்வப்போது தோட்டத்திற்குள் புகுந்து மிகுந்த அட்டகாசம் செய்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக யானைகளை அடர்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் எனவும், அதேபோன்று நஷ்ட ஈடு உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை  வைத்தனர்.




நீச்சல் குளத்தில்   ஆனந்த குளியல் போட்ட கஸ்தூரி யானை


பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கடந்த 49 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயதில் கஸ்தூரி யானை வந்தது. யானை கஸ்தூரி பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள காரமடை தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது. தற்போது 57 வயதாகும் கஸ்தூரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்களில் பங்கேற்கிறது. பழனியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் நெருக்கமான யானையாக கஸ்தூரி திகழ்கிறது. பழனியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  




பகலில் வாட்டி வதைக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமப்படுகின்றன. இதற்காக, காரமடை தோட்டத்தில் ரூ.10 லட்சத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் யானை கஸ்தூரி நீச்சல் அடித்தும், மூழ்கி குளித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது. அதனால் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கஸ்தூரி யானை காலையில் சாதாரண குளியல், மாலையில் நீச்சல் குளத்தில் ஆனந்த குளியல் என தினமும் 2 வேளை குளிக்க வைக்கப்படுகிறது.