உலக தமிழர்களின் திருநாளாக அழைக்கப்படும் தைப் பொங்கல் விழா பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். குறிப்பாக தென்மாவட்டங்களில் பொங்கல் விழா வெகு சிறப்பாக முன்னெடுக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி, மஞ்சுவிரட்டு, விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு முறையில் மகிழ்ச்சி பொங்கும். மற்ற மாவட்டங்கள் எப்படியோ மதுரைக்கு பொங்கல்தான் தீபாவளி. ஒரு மாதத்திற்கு முன்பே காளையர்களும், மாடுபிடி வீரர்கள் பரபரப்பாக தயாராகி விடுவார்கள். 

 



விவசாயிகள், போக்குவரத்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள், உணவகங்கள், மீனாட்சியம்மன் கோயில் சுற்றுவட்டாரங்கள், கிராமங்கள் என்று எல்லாம் பிசியாக மாறிவிடும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பணிகள் ஆயத்தமாகும்.  இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து வெளிப்படையாக போட்டியை நடத்தக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



அதில், “மதுரை அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் தை மாதம்  தமிழர்களின் பாரம்பரிய விழாவாக  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். கடந்த, ஆண்டு கொரோனா அச்சத்திலும் சமூக இடைவெளி, முகக்கவசம், உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காளைகள், வீரர்கள் பரிசோதனைக்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. ஆனால் அவை முறையாக பின்பற்றப்படவில்லை . ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள் டி-சர்ட்டை மாற்றி ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டனர்.  அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கமிட்டியால் வழங்கப்பட்ட தங்க நாணயம் போலி என தெரியவந்தது, ஜல்லிக்கட்டு கமிட்டியால் பெறப்படும் நன்கொடை, பரிசுப் பொருட்களில் குறித்த தகவலை மாவட்ட நிர்வாகத்திற்கு அளிக்காமல் முறைகேடு நடைபெறுகிறது. 



இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர், அரசு ஊழியர்கள் என 2000-க்கு அதிகமானோர் ஈடுபடுகின்றனர். ஆனால், இவர்களுக்கு எந்த ஊதியமும் வழங்கப்படுவது இல்லை எனவும். வருகின்ற ஜனவரியில் நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஓர் குழு அமைத்து நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார், மேலும் ஜல்லிக்கட்டு கமிட்டியால் பெறப்படும் நன்கொடைகளுக்கு ரசீது, பரிசு பொருட்களின் தகவலை வெளிப்படையாக வெளியிட வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்" என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்தார்.

 

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு வழங்குவதில் பல்வேறு குழப்பம் உள்ளதால் அதனை மாவட்ட ஆட்சியர் கண்காணித்து சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்க விடுத்துள்ளனர்.