அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தவர் எஸ்.ஆர்.தமிழன். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காலமானார்.  ஆண்டுதோறும் டிசம்பர் 26ஆம் தேதி அவருடைய நினைவு நாளையொட்டி சம்பந்தப்பட்ட கட்சியினர் அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துவதற்காக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் மற்றும் நிர்வாகிகள் சில கார்களில் வந்தனர். க.விலக்கு பகுதியை கடந்து அவர்கள் தேனிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அதே திசையில் க.விலக்கில் இருந்து தமிழ்தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகளும் சிலர் கார்களில் வந்து கொண்டிருந்தனர்.



 

யார் முதலில் அஞ்சலி செலுத்தும் இடத்துக்கு செல்வது என்பது தொடர்பாக அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டது. இதனால், போட்டி போட்டு கார்களை ஓட்டி வந்தனர். தேனி புறவழிச்சாலையில் முந்திச் செல்ல முயன்ற போது இருதரப்பினரும் கார்களை சாலையில் நிறுத்தி திடீரென்று தகராறில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு மோதலாக உருவானது. சிலர் காரில் இருந்த பட்டா கத்திகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.



 

இந்த மோதலில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (28), பாலமுருகன் (36), பாண்டியராஜன் (41), தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். 6 கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை விலக்கி விட்டனர். இதையடுத்து இரு தரப்பினரும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.



 

இந்த சம்பவம் தொடர்பாக தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன், நிர்வாகிகள் பாலமுருகன், தமிழ்ச்செல்வன் மற்றும் சிலர் மீதும், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் சங்கிலி, மாநில தலைவர் எம்.பி.எஸ்.முருகன், நிர்வாகிகள் செல்வம், சோலைத்தேவன், குமரேசன், வினோத், கோட்டை மற்றும் சிலர் மீதும் தேனி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார். இந்த மோதல் தொடர்பாக 30க்கும் மேற்பட்டவர்களை போலீசார் நேற்று இரவு பிடித்து தேனி காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.  நடு ரோட்டில் பட்டா கத்தியுடன் சண்டை நடந்த இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர