முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளதாவது,” தமிழகத்தில் ஒரு கோடியே 20 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாதது வேதனையின் உச்சமாக உள்ளது. இளைய சமுதாயத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு கேள்விக்குறியாகி உள்ளது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலை வாய்ப்பு மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினார்கள். தற்பொழுது 3,000 மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் பட்டய மற்றும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியே வருகின்றனர். சுமார் இரண்டு லட்சம் பேர் கல்வி நிலையங்களில் தேர்ச்சி பெறுவதில்லை, ஆக மொத்தம் 10 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து வெளியேறி வேலைவாய்ப்புக்காக காத்து வருகின்றனர் இதுகுறித்து எந்த நடவடிக்கை இல்லை.
அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் மூன்றரை லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்கள். மேலும் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. அதை உடனே நிரப்ப வேண்டும் என்று எடப்பாடியார் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுகுறித்து அரசு எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்ல இந்த நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் 50,000 பேர் தேர்வு எழுதவில்லை. இதே அதிமுக ஆட்சி காலத்தில் நடந்திருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் ஸ்டாலின் குதித்து இருப்பார். மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பதைப் போல தாங்கள் செய்யும் தவறை மறைக்கின்றனர். வாக்களித்த மக்களுக்கு எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றாத திமுக அரசு, ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடி அளவில் மது விற்பனை செய்ய இலக்காக கொண்ட திட்டத்தை மட்டும் வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளது. இப்படியே சென்றால் ஐந்து ஆண்டுகளின் திமுக ஆட்சியின் முடிவில் மது விற்பனை பல கோடி அதிகரித்து தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் எதிர்காலமே சீரழித்து விடும் இது சர்வாதிகார ஆட்சியாக உள்ளது.
இது எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இளைய சமுதாயத்திற்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளார். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 புதிய கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள், நான்கு பொறியியல் கல்லூரிகள், 1,102 ஏக்கரில் ஆசியாவில் மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி பூங்கா, 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 248 தொடக்கப்பள்ளிகள் தொடக்கம் 117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்வு, 1079 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம்உயர்வு, 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு,52 லட்சம் லட்சம் பள்ளி மாணவர்களுக்கு விவையில்லா மடிக்கணினிதிட்டம், மேலும்13 லட்சம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடு ஆடுகள் திட்டம் ,பசுமை வீடு திட்டம், ஒரு கோடியே 87 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி கிரைண்டர் திட்டம் இது போன்ற பல்வேறு திட்டங்களை கடந்த அம்மா அரசு வழங்கியது ஆனால் தமிழகத்தின் கடன் சுமை உயரவில்லை ஆனால் தற்போது எந்த திட்டம் செய்யாமல் தமிழகத்தின் கடன் சுமையை இந்தியாவிலேயே முதல் இடத்தில் அதிகரித்து உள்ளது வேதனை உச்சமாக அரசு உள்ளது” என தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்