மதுரையில் ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் படத்தை கிழித்து எறிந்து,காலணியால் தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் - அதிமுகவில் தற்போது அசாதரண நிலைக்கு காரணமானவர்களுக்கு மக்கள் தண்டனை தருவார்கள் , யாராலும் என்னை நீக்க இயலாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.






 

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு பிரிவினராக செயல்பட்டு வருகின்றனர். மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை விமானநிலையத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்சிக்கு அதிமுகவின் ஒற்றைத்தலைமையே , பொதுச்செயலாளரே என்ற முழக்கத்தோடு வரவேற்றனர். அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் தொண்டர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.



இதனையடுத்து தனது பிரச்சார வாகனத்தில் சென்ற ஓபிஎஸ் புறப்பட்டபோது பிரச்சார வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த  ஈபிஎஸ் படத்தை பார்த்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்களது காலணியால் ஈபிஎஸ் படத்தை தாக்கியதோடு ஈபிஎஸ்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.




 

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, உயிரிலும் மேலான அதிமுக தொண்டர்கள் என் பக்கம் தான் உள்ளனர், தொண்டர்களோடு என்றும் இருப்பேன், தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிப்பேன் என்றார். மேலும் அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த  அசாதாரண சூழல், யாரால் சதிவலை பின்னப்பட்டது என்பது  மக்களுக்கு தெரியும் அதற்கு மக்கள் தண்டனை தருவார்கள் எனவும், ஓபிஎஸ் போன்ற தொண்டரை பெற்றது பாக்கியம் என அம்மா கூறினார்கள் அப்படிப்பட்ட என்னை யாராலும் அம்மாவின் இதயத்தில் இருந்து நீக்க இயலாது, என் எதிர்காலத்தை மக்களும் தொண்டர்களும் நிர்ணயிப்பார்கள் என்றார்.

 

விமானம் மூலம் மதுரை வந்த ஓ.பி.எஸ்.,க்கு மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். வழிநெடுகே தொண்டர்களின் உற்சாக வரவேற்பை கண்ட ஓ.பி.எஸ்., நெகிழ்ச்சியுடன் கை அசைத்துச் சென்றார்.