Southern Railway: மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை! அசத்தும் ரயில்வே!

நவீன ஓய்வு விடுதி ஓடும் தொழிலாளர்கள் பணிக்கு பிறகு உரிய ஓய்வெடுத்து மீண்டும் ரயில்களை பாதுகாப்பாக, குறித்த நேரத்தில் இயக்க உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement

ரயில் மரம் - ஓடும் தொழிலாளர்கள் கூடு

Continues below advertisement

ரயில்களை இயக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் லோகோ பைலட்டுகள், உதவி லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ஆகியோர் ஆவர். இவர்கள் ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் ஓடும் தொழிலாளர்கள்  (Running Staff) என அழைக்கப்படுகின்றனர். இரவு பகல் பாராது தொடர்ந்து தொலைதூர ரயில் நிலையங்களுக்கு ரயில்களை இயக்கும் இவர்களுக்கு முக்கிய ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் அமைக்கப்படுகிறது. இதே போல மதுரை ரயில்வே காலனியில் ரூபாய் 5 கோடி செலவில் நவீன வசதிகளுடன் புதிய ஓடும் தொழிலாளர்கள் ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த ஓய்வு விடுதிக்கு "ரயில் மரம் - ஓடும் தொழிலாளர்கள் கூடு" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ஓய்வு அறை 977 சதுர அடி தரைதளமும், 740 சதுர அடி முதல் தளமுமாக விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. ஓடும் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ஒரு அறை என்ற வகையில் 40 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளில் குளிர்சாதன வசதி, கட்டில் மெத்தை, மின் விளக்குகள், மின் விசிறி, மேஜை, நாற்காலி, உடைமைகளை வைக்க தனி மேஜை, படிப்பதற்கான தனி மின் விளக்கு, கண்ணாடி  போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மன அமைதியுடன் ஓய்வெடுக்க முடியும்

பெண் லோகோ பைலட்டுகளுக்கு மூன்று படுக்கைகள் கொண்ட  இரண்டு தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் இன்ஜின் ஆய்வாளர்களுக்கு இரு படுக்கைகள் கொண்ட ஒரு அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வறையில் ஒரே நேரத்தில் 48 பேர் தங்கி ஓய்வெடுக்க முடியும். இந்த நவீன ஓய்வு விடுதியில் சமையலறை, உணவு அருந்தும் அறை, புத்தகங்கள் படிக்கும் அறை, யோகா மற்றும் தியான அறை, உடற்பயிற்சி கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. வெளிவளாகப் பகுதியில் நடைப்பயிற்சிக்கு பசுமை பூங்காக்கள் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கைகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் கிடைக்கும் வகையில் இந்த ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது.  ஓடும் தொழிலாளர்களுக்கு, ஓடும் தொழிலாளர் ஓய்வறை மேலாண்மை திட்டம் என்ற மென்பொருள் வாயிலாக அறைகள் ஒதுக்கப்படுகின்றன. கண்காணிப்பு கேமரா வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எழில்மிகு விளக்குகள், சுவர் வண்ணங்கள், கட்டுப்பாடற்ற காற்றோட்டம் கொண்ட ஓய்வு விடுதி ஓடும் தொழிலாளர்களுக்கு மன அமைதியுடன் ஓய்வெடுக்க சிறந்த இடமாக திகழ்கிறது. ஓய்வு விடுதியின் முக்கிய இடங்களில் அழகாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு செய்திகள் மற்றும் பணி பயிற்சி செய்திகள், ரயில்களை பாதுகாப்பாக இயக்க தொழிலாளர்களுக்கு உதவுகிறது.

ஸ்கேன் செய்து ஓய்வு விடுதி செயல்பாடு

90% மானிய விலையில் தரமான, சுவையான சைவ, அசைவ உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வு அறைக் காப்பாளர் 24 மணி நேரமும் ஓய்வு அறையில் தங்கியுள்ள ஓடும் தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஓடும் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டிய ரயில்கள் புறப்படும் நேரத்திற்கு முன்னதாக அவர்களை ஓய்வில் இருந்து எழுப்பி குறித்த நேரத்தில் ரயில்களை இயக்க காப்பாளர் உதவுகிறார். இந்த ஓய்வு விடுதி அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரர் வாயிலாக நிர்வகிக்கப்படுகிறது. ஓடும் தொழிலாளர்கள் ஓய்வு அறையில் உள்ள "கியூ ஆர் கோடு" ஸ்கேன் செய்து ஓய்வு விடுதி செயல்பாடு பற்றிய பின்னூட்டம் அளிக்கும் வசதியும் உள்ளது. ஓய்வு விடுதி செயல்பாடு குறித்து தினந்தோறும் மேற்பார்வையாளர் அளவிலான ஆய்வு நடைபெறுகிறது. மேற்பார்வையாளர் ஆய்வறிக்கை அதிகாரிகள் அளவில் விவாதிக்கப்பட்டு ஓய்வு விடுதி சிறப்பாக செயல்பட வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன ஓய்வு விடுதி ஓடும் தொழிலாளர்கள் பணிக்கு பிறகு உரிய ஓய்வெடுத்து மீண்டும் ரயில்களை பாதுகாப்பாக, குறித்த நேரத்தில் இயக்க உதவும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola