மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத  வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.  ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை  பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி, கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். 



 

மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலையுயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த போது கடந்த மாதம்  நியோமேக்ஸ்  நிறுவனத்தின் இயக்குனர்களான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து ,சகாயராஜா பத்மநாபன் , மலைச்சாமி ஆகிய 6பேரையும்  பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.  இதனிடையே நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் நிறுவனர்களான வீரசக்தி, கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்குலுக் அவுட் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. மேலும் இவர்கள்  ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைமன்ராஜா, பத்மநாபன், கபில் ஆகிய மூவருக்கு மதுரை மாவட்ட பொருளாதார குற்றயவியல் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கிய நிலையில் மூவரும் தினசரி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டுவருகின்றனர்.



 

இதனிடையே நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கில் முதலீடு செய்து பணம் பெறாத முதலீட்டார்கள் புகார் மனு அளிப்பதற்கான ஏற்கனவே மதுரை மற்றும் விருதுநகரில் 2 சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டிருந்து அதில் ஏராளமானோர் புகார் மனுக்கள் அளித்தனர். இந்நிலையில் நியோமேக்ஸ் நிதி மோசடி தொடர்பான வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 5 பிரதான நிறுவனங்கள் மற்றும் 20 கிளை நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டார்கள் புகார் அளிக்க ஏதுவாக இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில்  பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா தலைமையில் புகார் மனு முகாம் நடைபெற்றுவருகிறது.



 

இந்த முகாமில் நியோமேக்ஸ் லிமிடெட், (2) கார்லாண்டோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (3) ட்ரான்ஸ்கோ பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (4) டிரைடாஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட், (5) குளோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட்'' மற்றும் அதன் 20 கிளை நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டார்கள் ஏராளமானோர் வருகை தந்து புகார் மனு அளித்துவருகின்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான முதலீட்டார்கள் வருகை தந்துவருகின்றனர். பெரும்பாலம் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், விவசாயிகள், ஓய்வூதியம பெறக்கூடிய நபர்கள் அதிகளவிற்கு வருகை தந்த மனுக்களை அளித்துவருகின்றனர். நியோமேக்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழி பத்திரங்கள், பில் உள்ளிட்ட ஆவணங்களுடன் ஏராளமானோர் புகார் அளித்துவருகின்றனர். இந்நிலையில் புகார் மனு முகாமிற்கு வருகை தரும் முதலீட்டார்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதோடு, அவர்களுக்கு உதவிகளையும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் செய்துவருகின்றனர்.