கையால் மலம் அள்ளுவதை தடுத்து அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த கோரிய வழக்கில,மனித கழிவை மனிதனே அகற்றும் முறையை வேறோடு அகற்றிடும் வகையில் கையால் மலம் அள்ளும் வகையில் பணியில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

ஆதித் தமிழர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் நாகராஜன். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.

அதில், "கையால் மலம் அள்ள தடை மற்றும் மறுவாழ்வுக்கான சட்டம் 2013ல் கொண்டு வரப்பட்டது. சட்டம் அமலாவதை கண்காணிக்கும் வகையில் மாநிலந்தோறும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இவர்கள் ஆய்வுகள் மேற் கொண்டு இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கண்டறிய வேண்டும். மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். தொழில்நுட்ப ரீதியிலான உபகரணங்கள் இல்லை. சட்டத்தை மீறி பணியில் ஈடுபடுத்துவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப் படுவதில்லை. ரயில்வே மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இன்னும் பலர் தொடர்ந்து கையால் மலம் அள்ளும் பணியில் தான் ஈடுபட்டுள்ளனர். 

எனவே, இவர்களை கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் என அறிவிக்க வேண்டும். மத்திய, மாநில அளவிலான கண்காணிப்பு குழுக்களையும், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு குழுக்களையும் அமைக்க வேண்டும். கையால் மலம் அள்ளுவதை தடுக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான மறுவாழ்வை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

 

இதேபோல் மேலும் சிலர் மனு செய்திருந்தனர்.இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்த உத்தரவில், 

 

* மனித கழிவை மனிதனே அகற்றும் முறையை வேறோடு அகற்றிடும் வகையில் கையால் மலம் அள்ளும் வகையில் பணியில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

* தூய்மை சார்ந்த பணிகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். 

 

* கழிவுநீர் மற்றும் சாக்கடைகள், இயந்திரங்கள் மூலம் மட்டும் அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கையால் மலம் அள்ளுவதை தடுக்கும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். 

 

* மறுவாழ்வு வழங்கப்பட்டவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் ஈடுபட கட்டாயப் படுத்தக் கூடாது. 

 

* மனித கழிவை மனிதன் அகற்றுவதில் உள்ள தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

 

* பொருளாதார ரீதியாக அவர்களின் சமூக தரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். இதுவரை இழப்பீடு வழங்காதவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.