நத்தம் சாணார்பட்டி அருகே பாஜக முன்னாள் மண்டல நிர்வாகியான பாலமுருகன் (எ) ரெண்டக் பாலன் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது. இதுவரை இரண்டு பேர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் மைக் செட் தொழில் செய்து வருகிறார். மேலும், இவருக்கு விஜயகுமார் மற்றும் கணேஷ்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில் தற்பொழுது மைக் செட் யாருக்கு என்ற பிரச்சனை இருவர் இடையே ஏற்பட்டது.
அப்போது தந்தை சுப்பிரமணி மற்றும் விஜயகுமார் ஆகியோர் ஒன்று சேர்ந்து கொண்டு கணேஷ் குமாருக்கு மைக் செட் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக பஞ்சாயத்து பேசுவதற்காக வந்த பாஜக முன்னாள் மண்டல நிர்வாகியான பாலகிருஷ்ணன் என்ற ரெண்டக் பாலன் இருவருக்கும் சமாதானம் செய்யாமல் விஜயகுமாருக்கு ஆதரவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த கணேஷ் குமார் தனது சக நண்பர்களோடு 03.07.25 இரவு மணியக்காரன் பட்டி அருகே உள்ள மடூர் பகுதியில் பாலகிருஷ்ணனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று திண்டுக்கல் சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் உயிரிழந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சாணார்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே திண்டுக்கல் நீதிமன்றத்தில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கஜேந்திரன், சதீஷ் ஆகிய இரண்டு பேர் நேற்று காலை சரணடைந்துள்ளனர்.இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கணேஷ் குமாரை சாணார்பட்டி காவல்துறையினர் நேற்று மதியம் கைது செய்துள்ளனர். தற்போது வரை இந்த கொலை வழக்கு சம்பந்தமாக இரண்டு பேர் சரண் அடைந்த நிலையில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் மேலும் ஹேமநாதன் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.