மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள். சித்திரை திருவிழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்
மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங், மேயர் இந்திராணி உள்ளிட்ட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். இந்த நிலையில் வீதி உலாவின் போது பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்காகவும் ஏராளமானோர் குடிநீர் பந்தல்களை அனைத்தும் அன்னதானமாக பிரசாதங்களை வழங்கியும் வருகின்றனர். இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு வருகை தரக்கூடிய பக்தர்களின் கலைப்பை போக்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கப்பட்டது.
கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா என்பது மதங்கள் கடந்த ஒற்றுமையை ஓங்கிசொல்லும் விழாவாக கொண்டாடப்படுவதற்கு இது சாட்சியாக அமைந்துள்ளது.