முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகம் சார்ந்தது, அரசியல் அல்ல – நடிகை கஸ்தூரி
மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு முற்றிலும் ஆன்மீக நிகழ்வாகும் என்றும், இதை அரசியல் விழாவாக பார்ப்பது தவறு என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்..
முருகன் மாநாடு:
மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை முருக பக்தர் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மும்முரமாக இரவிலும் நடைபெற்று முடிந்துள்ளது. மாநாடு நடைபெறும் மேடையில் அறுபடை வீடுகள் அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது. மாநாட்டின் சிறப்பம்சமாக அறுபடை வீடுகளின் முருகனையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ளது.
கஸ்தூரி பேட்டி:
கும்பாபிஷேகம், ஆன்மீக மாநாடுகளை மக்கள் நடத்தினால், அதை அரசியல் ஆதாயம் தேடுவது எனப் பார்க்க முடியாது. மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா? என்ற கேள்வி நிலவுகிறது, என்றார்.
திமுக முன்னதாக நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக இருந்தது என்றும், தற்போதைய மாநாடு மக்களின் பேரெழுச்சியுடன் நடைபெறுவதாகக் கூறினார்.
பவன் கல்யாண் கட்சித் தலைவராக அல்ல முருக பக்தராக வருவது பெருமை என்றும் அவரை திமுக அரசு வரவேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
முருகன் தமிழ்க்கடவுள்
இயக்குநர் அமீர் கூறிய மதவாதக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கஸ்தூரி, முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கம் உறுதியாக பிரதிபலிக்கப்படுகிறது. மாற்றுமதத்தினர் தேவையில்லாத சொற்களை தவிர்க்க வேண்டும். சுல்தான்கள் கூட கோவிலுக்கு நற்பணி செய்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை, என கூறினார்.
முருகன் தமிழ்க்கடவுள் என்றும், அவருடைய மூதாதையர்கள் தமிழர்களே அவர் தமிழனாக ஏற்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
விஜய்க்கு வாழ்த்து:
நடிகர் விஜய் பிறந்த நாள் குறித்து பேசிய கஸ்தூரி, அவரது பிறந்த நாள் ஒரு இடத்தில் மட்டுமல்ல எங்களது ஒவ்வொரு மனதிலும் கொண்டாடப்படுகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல விதிமுறைகளால் அந்த அன்பு குறையாது, என்றார்.விஜய் சரியான பாதையில் பயணித்து வருகிறார். வெற்றி என்பது அவருடைய கட்சியின் பெயரிலேயே உள்ளது. அதற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.