மழையின்மையால் குறைந்து வரும் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம்.. கேள்விக்குறியாகும் முதல் போக சாகுபடி
நீர்மட்டம் குறைந்து வருவதால் தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். அணைக்கு 50 கன அடி நீர் மட்டுமே வருகிறது.
முல்லைப் பெரியாறு அணை மேற்குதொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்ட அணையாகும். இது கட்டப்பட்டுள்ள இடம் கேரளாவுக்கு உரிமையானது. தமிழக பொதுப்பணித்துறை இவ்வணையைப் பராமரித்து வருகிறது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி, உயரம் 155 அடி ஆகும்.
முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் வருசநாடு, பெரியகுளம், முருகமலை, தேவதானப்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து சேதமானது.
தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.இந்த வருடம் பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தபோதும் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் முதல் போக நெல்சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும்.
நீர்மட்டம் குறைந்து வருவதால் தண்ணீர் திறக்கப்படுமா? என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். அணைக்கு 50 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 113.75 அடியாக சரிந்துள்ளது. 1518 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.வைகை அணையின் நீர்மட்டம் 59.84 அடியாக உள்ளது. 114 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3572 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 31 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.71 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 3 கன அடி.சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 32.60 அடியாக உள்ளது. 9 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை