கேரளாவுக்கு எம்டிஎம்ஏ போதைப்பொருள் சப்ளை செய்து வந்த பஞ்சாப் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தான்சானியா நாட்டை சேர்ந்த நீதிபதியின் மகன் மற்றும் அவரது தோழியை கேரள போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளம் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் எம்டிஎம்ஏ போதைப்பொருளுடன் இப்ராகிம் முசம்மில் (27), அபிநவ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது கூட்டாளியான முகம்மது ஷமில் (28) என்பவர் மைசூருவில் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதாவது கைதானவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து டேவிட் என்பவருக்கு பெருமளவு பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க:சிவன் கோயிலில் நந்தி ஏன் வெளியிலேயே இருக்கிறார்? என்ன வரலாறு? - பக்தர்களே தெரிந்து கொள்ளுங்கள்
அந்தப் பணம் உடனுக்குடன் ஹருணா என்பவரின் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டதும், நொய்டாவில் வைத்து பணம் எடுக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து குன்னம்குளம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இவர்கள் இருவரும் பஞ்சாப்பில் தங்கி இருப்பது தெரியவந்தது. எனவே டேவிட் மற்றும் ஹருணாவை பிடிப்பதற்காக குன்னம்குளம் போலீசார் பஞ்சாப் விரைந்தனர். அங்கு நடத்திய தீவிர விசாரணையில் பக்வாரா என்ற இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த டேவிட் என்டமி (22) மற்றும் அவரது தோழியான அத்கா ஹருணா (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் நேற்று கேரளாவுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் டேவிட் என்டமி மற்றும் அத்கா ஹருணா ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மவுலி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்கள் என்ற தகவல் தெரிய வந்தது. கூடுதல் தகவலாக டேவிட் என்டமி தான்சானியா நாட்டில் உள்ள நீதிபதியின் மகன் என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் இருவரும் சேர்ந்து தான் போதைப்பொருள் தொழில் செய்து வந்துள்ளனர்.
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
அதில் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு எம்டிஎம்ஏ சப்ளை செய்து வந்தனர். இதையடுத்து பிடிபட்ட இருவரையும் போலீசார் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிடிபட்ட இருவருடன் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.