முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்கும் பொறுப்பு தொடக்கத்தில் தமிழகத்திடம் இருந்தது. 1982 முதல் பெரியாறு அணை பாதுகாப்பில் கேரள போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கவேண்டும் என தமிழகம் தெரிவித்தபோதும், மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை என்ற கேரள அரசு ஒரு டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ்ஐ என 124 கேரள போலீசார் அடங்கிய தனிப்படையை, பெரியாறு அணை பாதுகாப்புக்கு நியமித்தது.




அவர்களுக்கான காவல்நிலையம் அணைப்பகுதியில் உள்ளது. இதில் சுமார் 60 பேர்கள் வரை தற்போது மாற்றுப்பணியாக வள்ளக்கடவு, வண்டிப்பெரியார் காவல்நிலையங்களில் பணியில் உள்ளனர். அணை பாதுகாப்பு போலீசாருக்கு 2 படகுகள் இருந்தது. இதில் ஒன்று பழுதானதால், தற்போது 14 பேர்கள் பயணிக்கும், 39.50 லட்சம் ருபாய் செலவில் 150 எச்பி திறன் கொண்ட புதிய விரைவு படகு உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. இந்த படகுக்கு “ “ரக்ஷா” (மீட்பு) என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று தேக்கடி படகுத்துறையில் இந்த புதிய படகை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இடுக்கி மாவட்ட எஸ்பி விஷ்ணு பிரதீப் படகு சேவையை கொடி அசைத்து தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் முல்லைப் பெரியாறு டிஎஸ்பி ராஜ் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.




ஆனால் கடந்த 2014&ல் தமிழகப் பொதுப்பணித்துறையினர் பெரியாறு அணைக்குச் சென்று திரும்ப வாங்கிய தமிழன்னை படகுக்கு இன்னும் கேரள அரசு அனுமதி தராதநிலையில், கேரள போலீசாருக்கு புதிய படகு வழங்கி, அதற்கு அனுமதியும் வழங்கி உள்ளதற்கு தமிழக விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை என்பது தமிழ்நாட்டிற்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு செட்டில்மெண்ட் ஏரியா. கிட்டத்தட்ட 8200 ஏக்கருக்கு ஆண்டுதோறும் வாடகையை பெற்றுக் கொண்டு, தமிழ்நாட்டிற்கு முற்றாக கையளிப்பு செய்யப்பட்ட ஒரு பகுதி.




முறையாக நாம் வாடகை செலுத்தும் ஒரு பகுதியில் வந்து, தமிழ்நாடு அரசினுடைய எவ்வித அனுமதியும் இன்றி, உள்ளே அமர்ந்து கொண்டு, நாங்கள் தான் எல்லாம் என்று கையில் துப்பாக்கிகளோடு வலம் வருவது என்பது, ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாக அணையை பராமரிக்கும் தமிழக பொறியாளர்கள் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்ட தமிழனை படகு, கடந்த 2014 ம் ஆண்டு அணைக்கு வந்தது.10 ஆண்டுகளை கடந்தும் அந்தப் படகை நம்மால் ஓட்ட முடியவில்லை. அதற்கு பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களை சொல்லிய கேரள மாநில அரசு மற்றும் கேரள மாநில வனத்துறை, குறிப்பாக பெரியார் புலிகள் காப்பக அதிகாரிகள், அதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.




அணைக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்கிற போர்வையில் அத்துமீறி உள்ளே நுழைந்து, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும், கேரள காவல்துறையினர்கள் அணைக்குள் வந்து போவதற்கு ஏற்கனவே 2 படகுகள் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், 150 குதிரை திறன் கொண்ட புது படகு ஒன்றும் கேரள காவல்துறைக்காக வாங்கப்பட்டு, இடுக்கி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரதீப் படகை இயக்கி வைத்ததோடு, அணைக்கும் வந்து சென்று இருக்கிறார். கொச்சினில் உள்ள போட் அத்தாரிட்டியிடம் அனுமதி பெற்ற தமிழனைக்கு இன்று வரை அனுமதி இல்லை. ஆனால் முற்றிலும் தமிழ்நாட்டிற்கு சொந்தமான ஒரு அணைக்குள் வந்து, தமிழக அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், ஒரு மாவட்ட கண்காணிப்பாளரால், ஒரு படகை இயக்கி வைக்க முடியுமா...? 1979 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில்  ஆரம்பித்த உரிமை பறிப்பு, இன்றுவரை நீடித்து வருவதை தமிழக அரசாங்கம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும். பெரியாறு அணைக்குள் கேரள மாநில அரசால் இயக்கப்படும் அத்தனை படங்களுக்கும், முறையான அனுமதியை பெற வேண்டும் என்கிற அழுத்தத்தை கேரளாவிற்கு தமிழகம் கொடுக்க வேண்டும். அதுபோல், ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையிலான குறைந்தபட்ச தமிழக காவலர்கள், முல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு பணிக்காக தங்க வைக்கப்பட வேண்டும் என்றனர்.