முல்லைப் பெரியாறு அணை என்பது கேரளாவில் உள்ள பெரியாறு நதியின் மீது கட்டப்பட்ட ஒரு புவி ஈர்ப்பு விசை அணை ஆகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஏலக்காய் மலைகளில், கேரளாவின் இடுக்கி மாவட்டம் தேக்கடியில் கடல் மட்டத்திலிருந்து 881 மீ உயரத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேய பொறியாளர் கர்னல்  ஜான் பென்னிகுவிக் அவர்களால் 1893ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும், தமிழகத்திற்கு கிழக்கு நோக்கி தண்ணீரை அனுப்பும் ஒப்பந்தத்தையும் பெற்றுத்தந்தார் பென்னிகுவிக். முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகள் அனைத்தும் தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.



Mullai Periyar Dam: பல ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும்.. முல்லை பெரியாறின் வரலாறு தெரியுமா..?


 நீர் தேக்கம்


முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு படுகை முழுமையாக கேரளாவிற்குள் உள்ளது, இது மாநிலத்திற்குள் ஒரு நதியாக அமைகிறது. 40 ஆண்டுகளில் முதல்முறையாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் நவம்பர் 21, 2014 அன்று 142 அடியை எட்டியது. கேரளாவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர்த்தேக்கம் ஆகஸ்ட் 15, 2018 அன்று அதன் அதிகபட்ச கொள்ளளவான 142 அடியை எட்டியது.


அணை கட்டப்பட்ட ஆண்டு


அணையின் கட்டுமானப் பணிகள் 1887 ஆம் ஆண்டு தொடங்கி 1893 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. 1886 அக்டோபரில் திருவிதாங்கூர் மகாராஜாவிற்கும் மாகாணத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின்படி, அணை கட்டுவதற்காக 8,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை 999 ஆண்டுகளுக்கும், 999 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விருப்பத்துடனும் இருந்தது. கேரளாவில் வெள்ளத்தை ஏற்படுத்திய பெரியார் நதியின் ஒரு பகுதியை, தமிழ்நாட்டின் வறட்சியால் பாதிக்கப்பட்ட வைகை நதிப் படுகைக்கு திருப்பிவிட இந்த அணை கட்டப்பட்டது. ஸ்காட்டிஷ் மேஜர் ஜான் பென்னிகுயிக் தலைமையில், இந்தத் திட்டம் தொடங்கியது.




குத்தகை ஒப்பந்தம்


அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பெரியாறு நீர்ப்பாசனப் செயற்திட்டத்தின் இந்தியாவிற்கான ஆங்கிலேய செயலாளருக்குமிடையே 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் அப்போதைய சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது. 24 ஆண்டுகளாக திருவிதாங்கூருக்கும் ஆங்கிலேய அரசுக்கும் இடையே நடைபெற்ற முயற்சிகளுக்குப் பின்னர் அந்த குத்தகை ஒப்புதலானது.




7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் அணை கட்டவும், கட்டியபின் நீர்ப்பாசனம் மற்றும் அது தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளவும், மாநில செயலாளருக்கு அதிகாரமும், முழு உரிமையும், சுதந்திரமும் உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பந்தப்படி அணையின் 155 அடி உயர நீர்த் தேக்கத்திற்கு 8000 ஏக்கர் நிலப்பரப்பும், அணை கட்டுவதற்கு 100 ஏக்கர் நிலப்பரமும் அளிக்கப்பட்டுள்ளது. நில வரியாக ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 5 ரூபாயாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆண்டுக்கு ருபாய் 40,000க்கு முல்லை பெரியார் அணையின் முழு நீரையும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதியையும் பயன்படுத்தும் உரிமையை முழுமையாக அந்த ஒப்பந்தம்  அரசுக்கு அளித்துள்ளது.


1947 இல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஜூலை 1, 1949 இல் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இரண்டும் ஒன்று சேர்ந்து, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. ஜனவரி 1, 1950 இல், திருவிதாங்கூர்-கொச்சி ஒரு மாநிலமாக அங்கீகாரம் பெற்றது.




நவம்பர் 1, 1956 இல் மலபார் மாநிலம், திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தெற்கு வட்டங்கள் நீங்கலான பகுதி, காசர்கோடு வட்டம், தெற்கு கனரா ஆகியவைகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப்பட்டது. பிரிட்டிஸ் அரசும் திருவிதாங்கூர் அரசரும் செய்துகொண்ட முந்தைய ஒப்பத்தம் செல்லுபடியாக தென்றும் அது புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கேரள மாநில அரசு அறிவித்தது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க கேரள அரசால் 1958, 1960, 1969 களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை. இறுதியாக 1970 இல் கேரள முதலமைச்சராக சி. அச்சுத மேனன் பொறுப்பிலிருந்தபோது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.




முல்லை பெரியாறு அணை கட்டுமானம்


முல்லைப் பெரியாறு அணை சுண்ணக்கல் மற்றும் சுர்க்கி கலவையுடன் கருங்கல் கொண்டு கட்டப்பட்ட ஒரு எடையீர்ப்பு அணையாகும். பொதுவாக எடையீர்ப்பு அணைகளின் எடையும் ஈர்ப்பு விசையும் நீர்த்தேக்கப் பகுதியைத் தாங்கி, அவற்றை நிலைப்படுத்துகின்றன. இதன் ஒரு பகுதியான முதன்மை அணையின் அதிகபட்ச உயரம் 53.6 m (176 அடி), நீளம் 365.7 m (1,200 அடி). இதன் உச்சிப்பகுதி 3.6 m (12 அடி) அகலமும் அடிப்பகுதி 42.2 m (138 அடி) அகலமும் கொண்டது. இதன் நீர்த்தேக்கம் 443,230,000 m3 (359,332 acre⋅ft) கொள்ளளவு உடையது. இதில் 299,130,000 m3 (242,509 acre⋅ft) பயன்பாட்டில் உள்ளது. முல்லை பெரியார் அணையின் வரைபடம் தற்போது கிடைத்துள்ளது. அதன் படி கேரள வனத்துறையினர் வாகன நிறுத்தமாக பயன்படுத்த ஒதுக்கிய இடமான புத்தடி என்ற இடம் அணையின் நீர்பிடிப்பு இடமாகும். பல்வேறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் கம்பீரம் மாறாமல் இருந்து வரும் முல்லை பெரியாறு அணை தமிழக மக்களின் குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.