பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பஞ்சத்தில் தென் தமிழகத்தில் விவசாயம் சீர்குலைந்தது. விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்கள் பசி, பட்டிணியால் சொந்த நிலத்தை விட்டு புலம் பெயரத்தொடங்கினர். இதனால் தமிழகத்தில் 2400 மீட்டர் உயரத்தில் சிவகிரி மலையில் தோன்றி பெருந்துறையாறு, சின்னாறு, சிறுதோணியாறு, கட்டப்பனையாறு, இடமலையாறு மற்றும் முல்லையாறை சேர்த்துக்கொண்டு 300 கி.மீ வடமேற்கு திசையில் பாய்ந்து அரபிக்கடலில் கலந்த தண்ணீரை, தென்தமிழகம் நோக்கி திருப்பி கொண்டு வர 1798&ல், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் தொடங்கி பலர் திட்டமிட்டும் நிதி பற்றாக்குறை, சரியான திட்டமிடல் இன்றி இம்முயற்சி தோல்வி அடைந்தது.




இறுதியில் பிரிட்டீஷ் அரசின் அனுமதியில் கர்னல் ஜான் பென்னிகுக் இதற்கான திட்டம் தயார் செய்தார். அவரது திட்டப்படி முல்லைப் பெரியாறு குன்றுகளையும், மலைகளையும் கடந்து மேற்கு நோக்கி ஓடும் போது கடந்து செல்ல வேண்டிய குறுகிய, ஆழமான மலையிடுக்கில் ஓர் அணை கட்டி, நதியின் ஓட்டத்தை சிறிது தூரத்திற்கு கிழக்கு பக்கம் திருப்பி, மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் இருந்து உற்பத்தியாகி கிழக்குப்பக்கம் ஓடிக்கொண்டுள்ள வைகை நதியில் இணைக்க முடிவு செய்தார். அணைகட்டி முடிக்கப்பட்டால் தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் வருவதால், திருவிதாங்கூர் மகாராஜாவுடன் நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1886 அக்டோபர் 29ஆம் நாள் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் உருவானது.




அணைநீரானது எல்லாக்காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 43 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கர்னல் பென்னிகுக் தலைமையில் பிரிட்டீஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணைகட்டும் பணியினை மேற்கொண்டது. ஆனால் அணை கட்டி முடிக்கப்பட்டபோது அணைக்காக 81.30 லட்சம் ருபாய் செலவு செய்யப்பட்டது. பென்னிகுக்கின் தீவிர முயற்சியினால், 1895ல் முல்லைப்பெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டது. அதே ஆண்டு (இந்திய நேரப்படி) அக்டோபர் 10- 1895 மாலை 6.00 மணிக்கு சென்னை மாகாண கவர்ணர் வென்லாக் தேக்கடிக்கு வந்து, பெரியாறு அணை தண்ணீரைத் தமிழகப் பகுதிக்கு திறந்துவைத்தார். அன்றிலிருந்து இன்று வரை, கடந்த 129 ஆண்டுகளாக, தலைமுறைகள் கடந்தும் தண்ணீர் கொடுத்து தென்தமிழகத்தை காத்து வருகிறது முல்லை பெரியாறு அணை.




அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட இந்நாளை தென் மாவட்டங்களில் பொதுமக்களும், விவசாயிகளும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இன்று  முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட 129 ஆம் ஆண்டை கொண்டாடும் விதமாக, லோயர்கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செய்தனர். 




999 ஆண்டு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளது என்ன?


ஒப்பந்தத்தின்படி 8000 ஏக்கர் பரப்பளவிலுள்ள தண்ணீரை தமிழ் நாட்டிற்கு குத்தகைக்கு கொடுக்கவும், தனியே 100 ஏக்கர் இடம் அதற்குண்டான பணிகளுக்குமாய் கொடுப்பதற்கு ஒப்பு கொள்ளப்பட்டது. இதற்கு குத்தகைத் தொகையாக ஏக்கருக்கு ஐந்து ரூபாய் தருவதாக சென்னை ராஜதானியும் ஒப்புக்கொண்டது. தேங்கியுள்ள நீர்பரப்பின் அடித்தளத்திலிருந்து 155 அடி உயர அணையை கட்டுவதற்கும், தண்ணீரை ஒரு குகைப்பாதை வழியாக தமிழகத்திற்கு கொண்டு செல்வதற்கும் ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்டது. மேலும் அணையின் மராமத்துப் பணிகள் செய்வதற்கான பொருட்களை எடுத்துச்செல்ல சென்னை மாகாணத்திற்கு முழுமையான உரிமை வழங்குவதுடன், அணையினுள் அடங்கும் மரம் மற்றும் மரக்கட்டைகளை, அணையின் நலம் கருதி செயல்படுத்தும் திட்டங்களுக்கு சென்னை மாகாண அரசு எவ்வித கட்டணங்களும் கட்டவேண்டியது இல்லை. போக்குவரத்தின் முழு உரிமையும், அணையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உரிமை, அதிகாரம், சுதந்திரம் சென்னை மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.