ஆடை உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்துவருகிறது. பட்டு ஆடைகள் தமிழகத்தின் பாரம்பரிய ஆடைகளாக உள்ள நிலையில் தமிழகம் பட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழக அரசு பட்டு உற்பத்திக்கு பல்வேறு வகையான மானியங்கள் வழங்கி பட்டு வளர்ச்சியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறது. பட்டு வளர்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் தமிழகத்திலேயே இரண்டாவது இடத்தில் முன்னோடி மாவட்டமாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் மூன்றாயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த மல்பெரி சாகுபடி மற்றும் பட்டு வளர்ப்பு தொழிலில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து ஐநூறு விவசாயிகள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி மற்றும் சாணார்பட்டி ஒன்றியத்தில் பட்டு வளர்ப்பு தொழில் அதிகளவு செய்யப்படுகிறது. மல்பெரி சாகுபடிக்கு கரிசல் மற்றும் கரிசல் கலந்த செம்மண் ஏற்றதாகும். மேலும் மல்பெரி சாகுபடிக்கு குறைந்தபட்ச தண்ணீர் போதுமானது. இதனால் ஓரளவு நீர்வளம் உள்ள பகுதியில் கூட மல்பெரி சாகுபடியை வெற்றிகரமாக செய்யமுடியும். மல்பெரி சாகுபடியில் ஏக்கருக்கு ஓராண்டிற்கு சராசரியாக இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் வரை நிகர லாபம் பெற முடியும். குறைவான வேலையாட்களே தேவைப்படுவதால் மல்பெரி சாகுபடியில் உற்பத்தி செலவு பெருமளவு கட்டுப்படுத்த முடியும். மல்பெரி செடிகளுக்கு முறையான சால்கள் அமைத்து பாசனம் செய்வதைவிட சொட்டு நீர் பாசனம் மிக சிறந்ததாகும். சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் சிக்கனம் செய்ய முடிவதோடு தேவையற்றவற்றையும் கட்டுப்படுத்த முடியும். மண்ணின் தண்மையை பொருத்து தேவையான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துகளுக்கு பட்டு வளர்ச்சிதுறை பரிந்துரை செய்துள்ள உரங்கள் இடுவதன்மூலம் நல்ல விளைச்சல் பெற முடியும். நடவு செய்த மூன்று மாதம் முதல் மல்பெரி செடிகள் பலன் கொடுக்க துவங்கி விடும்.
மல்பெரி சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் நடவு மானியமாக தமிழக அரசு வழங்குகிறது. இது விதை மற்றும் நில சீரமைப்பிற்காக விவசாயி செய்யும் செலவில் கிட்டத்தட்ட 70 சதவீதம் ஆகும். மேலும் தமிழக அரசு மண்டல மற்றும் மாவட்ட அளவிலான பட்டு வளர்ச்சி துறை அலுவலகங்கள் அமைத்து விவசாயிகளுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கி வருகிறது. மேலும் மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழக அரசின் பட்டு வளர்ச்சி துறை ஆகியவை பட்டு உற்பத்தி மற்றும் மல்பெரி சாகுபடிக்கு ஏராளமான மானியங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது.
இந்திய அளவில் வருடந்தோறும் சுமார் ஐந்தாயிரம் மெட்ரிக் டன் பட்டு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஓரளவு வெற்றியும் பெற்று வருகிறார்கள், அதில் தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 850 மெட்ரிக் டன் வெண்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக பட்டு வளர்ச்சித்துறை மற்றும் மத்திய பட்டு வாரியம் மூலம் மல்பெரி சாகுபடி மற்றும் பட்டு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு நடவு மானியம், சொட்டுநீர் பாசனம், புழு வளர்ப்பு மனை உள்ளிட்டவைகளுக்கு அதிகபட்சமாக ஒருலட்சத்து எண்பதாயிரம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு வருடத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மத்திய பட்டு வாரியத்தின் பங்களிப்புடன் தமிழக அரசின் பட்டுவளர்ச்சித்துறையால் ஒரு கோடியே ஏழு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது வெண்பட்டு உற்பத்தி செய்துவரும் விவசாயிகளுக்கு இளம் புழு வளர்ப்பு நிலையத்தில் பட்டுப்புழுக்கள் பெறுவதற்கு போக்குவரத்து செலவாக 100 முட்டை தொகுதிகளுக்கு 500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் மூன்று வருடங்களுக்குப்பிறகு புழு வளர்ப்பு மனைகளை சீரமைப்பதற்கும் மானியம் வழங்கப்படுகிறது.
மேலும் புழு வளர்ப்பிற்கான இடு பொருட்கள் விளையில்லாமல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பட்டு கூடுகளை தமிழகத்தில் சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடகாவிலும் விற்பனை செய்கின்றனர். பரவ மழை பொய்த்து போகும் காலங்களில் மட்டும் மல்பெரி சாகுபடி சிறிது தேக்கம் அடைகிறது. இதனை சரி செய்ய மேம்படுத்தப்பட்ட சொட்டுநீர் பாசன முறையை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை ஆண்டுக்கு நூறு முதல் நூற்று பத்து கோடி வரை பட்டு நூல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வெண்பட்டு நூல் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கே பயன்படுத்தப்பட்டு வருவதால் ஏற்றுமதிக்கு அதிக அளவில் வாய்ப்பு இருந்தும் ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. பட்டு நூல் வர்த்தகத்தை பொருத்தவரை சீனா முன்னணியில் உள்ளது.
மல்பெரி சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறைகளை கையாள்வதாலும் அதிக அளவிலான பரப்பளவில் மல்பெரி சாகுபடியை ஊக்குவிப்பதாலும் இன்னும் பெருமளவில் பட்டு உற்பத்தியில் ஈடுபட முடியும். தற்போது ஆண்டிற்கு சுமார் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வரை பட்டு உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் பட்டு உற்பத்திக்கான தேவை அதிகரித்துவருவதை முன்னிட்டு பட்டு வளர்ப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் தேவைப்படுகின்றன என்று பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பட்டுக்கூடுகளுக்கு நிலையான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டம் என்பதும், வெளிநாட்டு பட்டு நூல்களை இறக்குமதி செய்வதை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் பட்டு உற்பத்தி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.