ஒரு ரகசிய திட்டத்தைப் போல எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடங்ப்பட்டுள்ளன என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சனம் செய்துள்ளார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், ”கடந்த மாதம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அவரே திட்டத்தை தொடங்கி வைத்திருக்கலாம். உண்மை சுடும். எனவே தோப்பூர் பக்கமே போகாமல் விமான நிலையம் சென்றதை நாடே பார்த்தது. ஒரு திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கு இடையில் ஐந்தாண்டுகள் உருண்டோடிய ஒரு புதிய வரலாற்றை இந்தியா பார்த்துக்கொண்டிருக்கிறது, பா.ஜ.க. ஆட்சியில். இந்த செயல் என்பது வெளிப்படையாக நாடாளுமன்ற தேர்தலுக்காக நடத்துகிற ஒரு நாடகம் என்பதை நாடறியும். இப்பொழுதுகூட நான் அங்கேயுள்ள நிர்வாக குழுவிடம் பேசினேன். பொறியியல் துறையை மட்டும் வைத்து ரகசியமாக துவக்கியிருக்கிறார்கள்.






2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் என்பதால் ஜனவரி மாதம் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல இப்பொழுது 2024-ம் ஆண்டு ஏப்ரல்-மே பொதுத் தேர்தல் என்பதால் மார்ச் மாதம் திட்டப்பணியை துவக்குவதாக அறிவிக்கிறார்கள். இவை அனைத்தும் வெளிப்படையாக திசை திருப்பும் நாடகம்தான்.” என்று தெரிவித்தார். 


மேலும், தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருகிறார்.