அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்து வருபவர் ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டத்தில்  உள்ள பெரியகுளம் இவரது சொந்த ஊராகும். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலைக்குப் பின்பு அதிமுகவில் பல்வேறு பிரிவினைகள்  கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஆட்சியில் கட்சிக்குள் இருந்த இரட்டை தலைமை குறித்த சர்ச்சைகளும் இன்று வரை ஓயாமல் இருந்து வருகிறது .




சமீபத்தில் சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டுமென தேனி மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் திமுகவின் ஆட்சிமாற்றம் வந்த பின்னர் சமீபத்தில் அதிமுகவிற்குள் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு மாவட்ட வாரியாக பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . 




இந்த உட்கட்சி தேர்தலில் தனக்கான ஆதரவு வட்டத்தை பெருக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி,  பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி வியூகம் வகுத்து செயல்படுவதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக ஒற்றை தலைமையின் அரியணை நோக்கி யார் நகர போகிறார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. இந்த நிலையில் பெரியகுளம் அதாவது ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் பகுதியில் அவரது வீடு மற்றும் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ரவீந்திரநாத் அலுவலகம் அருகே பல்வேறு இடங்களில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமி என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் ஒட்டியுள்ளார்.




இதனால் அதிமுக வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது. அதாவது யார் இந்த சுவரொட்டியை ஒட்டியது என்று விசாரிக்கத் தொடங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள், தேனியில் இபிஎஸ்-ஐ முன்னிறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் முன்னதாகவே அந்நபர் அதிமுகவின் சாதாரண தொண்டன் என்றும் செய்தி வெளியானது. இந்த நிலையில் மாவட்ட செயலாளர், பெரியகுளம் நகர செயலாளர் உள்ளிட்டோர் ஒன்றுதிரண்டு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவே இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட செயலாளர் சையது கான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சுவரொட்டி ஒட்டிய நபர் அமமுக கட்சியில் இருக்கிறார். அவர் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் யாரோ சிலர் தூண்டுதலின் பெயரில் சுவரொட்டி ஒட்டி உள்ளார் . சம்பந்தப்பட்ட நபர் இனிமேல் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பும் கேட்டுள்ளதாகவும் இதை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்து அனுப்பி வைத்து விட்டதாகவும் மாவட்ட செயலாளர் சையதுகான் தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண