அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்ட நிலையில், போட்டியை துவக்கி வைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 


தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வெகு விமரிசையாக நடைபெறும்.  குறிப்பாக அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் மிகவும் முக்கியமானது. ஜல்லிக்கட்டு போட்டியில் மல்லுக்கட்ட காளைகளை உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். தங்களது காளைகளுக்கு சீறிப்பாயுதல், வீரர்களுக்கு போக்கு காட்டுதல், மண்குவியலை குத்துதல், நீச்சல் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்கள் அளிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

 



 

இதில், அலங்காநல்லூர் போட்டி அரசு சார்பில் நடைபெறும் என்பதால் அதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது. வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், டி.ஐ.ஜி பொன்னி, எஸ்.பி. சிவ பிரசாத்  மற்றும் விழா கமிட்டியினர் பங்கேற்றனர்.




 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்க உள்ளார். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், மாடுகளுக்கு ஆன்லைன் மூலமே முன்பதிவு நடைபெறும். வெற்றி பெறும் முதல் மாடு, வீரருக்கு பரிசாக காரும், பங்கேற்கும் அனைத்து மாட்டுகளுக்கும், மாடுகளை பிடிக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்க காசு பரிசாக வழங்கப்பட உள்ளது" என்றார். கால்கோள் நிகழ்வை தொடர்ந்து வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, பார்வையாளர்களுக்கான கேலரி அமைப்பது, காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடம் உள்ளிட்டவைகளை தயார் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளன.