தமிழ்நாடு அரசு விதித்துள்ள கொரோனா கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூல் செய்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சேர்ந்த செல்வராணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "எனது கணவர் கணேசன் துணை வட்டாச்சியராக இருந்து ஓய்வு பெற்றவர். மானாமதுரை ஜெயபால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தபோது கேன்சர் இருப்பதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வில்லை என்றால் உயிருக்கு ஆபத்து என தெரிவித்தனர்.உடனடியாக மதுரையில் உள்ள குரு மருத்துவமனையில் அனுமதித்தோம் அப்போது எனது கணவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டது.அறுவை சிகிச்சை முடிந்த இரண்டு நாட்களில் எந்த ஒரு கொரோனா பரிசோதனை செய்யாமல் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவிற்கு எனது கணவரை மாற்றினர்.
முறையாக பதில் எதுவும் கூறாமல் அடிப்படை வசதிகள் செய்து தராமல் லட்சக்கணக்கில் பணம் கட்டும் படி கூறினார்.எனவே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றுவதாக நாங்கள் கூறினோம். மீண்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் கட்டிவிட்டு அழைத்து செல்லும்படி தெரிவித்தனர். காவல் துறையினரிடம் புகார் அளிப்பதாக தெரிவித்தோம். யாரிடம் வேண்டுமானாலும் புகார் அளித்து கொள்ளுங்கள் எங்களுக்கு முதல்வர் வரை அனைவரையும் தெரியும் எனக்கூறி மீதமுள்ள தொகையை கட்ட வேண்டும் என கூறிவிட்டனர். மொத்தமாக 10 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளோம் ஆனால் அவர்கள் 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 554 ரூபாய்க்கு மட்டுமே ரசீது கொடுத்தனர் மேலும் நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கான படிவத்திலும் முறையாக எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எனது கணவர் ஜனவரி 28 ஆம் தேதி உயிரிழந்தார்.தமிழ்நாடு அரசு விதித்துள்ள கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பிப்ரவரி 11ஆம் தேதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு செய்தேன். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, வழக்கு குறித்து தேசிய மருத்துவ கவுன்சில், தமிழ்நாடு மருத்துவ போர்டு, சுகாதாரத்துறை செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர் பதில் மனு தாக்கல் செய்யவும், மானாமதுரை ஜெயபால் மருத்துவமனை சேர்மன், குரு மருத்துவமனை சேர்மன் மற்றும் விஜயகுமார், திவ்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.