மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுக்க மனு அளித்திருந்தனர், அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் தனது சொந்த நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகளை செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்திருந்தார்.
அதன்படி முதல்வரின் நிதியிலிருந்து சுமார் 1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் பாப்பாபட்டி கிராமத்தில் அங்கன்வாடி கட்டிடம், ரேசன் கடை கட்டிடம் மற்றும் நீர் தேக்க தொட்டி என 12 நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்திருந்த நிலையில்  இன்று பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இணைந்து இந்த நலத்திட்ட பணிகளை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி பொதுமக்களுக்கு அர்ப்பணித்தனர்.
 

இந்த விழாவில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, இந்தியாவில் இருக்கிற முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன்னோடி முதலமைச்சராக இரவு பகல் பாராமல் மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கிறார், குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்கு சுய உதவி குழு மூலம் உதவிகளை செய்வதோடு, ஆண்களுக்கு எந்த எந்த பகுதிகளில் அவர்களுக்கு என்ன தேவை என்பதை கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
கலைஞரின் வீடுகட்டும் திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வரும் சூழலில் நமது மதுரை மாவட்டத்தில் அதிகப்படியான பயன்களை பெற அதிக கவனம் செலுத்தி முழுமையாக செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நமது மக்கள் எந்த அளவிற்கு முதல்வருக்கு ஆதரவளித்து வருகிறார்கள் என்று சொல்லும் போது இனி ஒரு போதும் தமிழ்நாட்டில் வேறு எவரும் முதலமைச்சராக வரமுடியாது என்பதற்கு சான்றாக ஆதரவு அளித்து வருகின்றனர் என பேசினார்.  
மேலும் அரசும் முறையாக செய்து கொண்டிருந்தால் தேவை குறைவாக இருக்கும் ஆனால் பத்தாண்டு காலம் மக்களுக்கு எந்த பணிகளையும், தேவைகளையும் செய்யாததால் தேவைகள் அதிகமாக உள்ளன அதை படிப்படியாக நிறைவேற்றக் கூடிய பொற்கால ஆட்சியாக நடைபெற்று வருகிறது இதே போல் படிப்படியாக இன்னும் பல நலத்திட்ட உதவிகளை செய்து தருவோம் என அமைச்சர் மூர்த்தி பேசினார். 
 
தொடர்ந்து பேசிய பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்..,”மதுரை மாநகரில் உள்ள பொருளாதார கட்டமைப்பு வசதிக்கும் புறநகர் பகுதிகளில் உள்ள வளர்ச்சிக்கும் வேறுபாடுகள் உள்ளன., அதை சரி செய்யும் விதமாக முதல்வருடன் இணைந்து இந்த பாப்பாபட்டியில் செய்த பணிகளை போல அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட பணிகளை செய்து மேம்படுத்துவோம் என உறுதி அளிப்பதாக பேசினார்.