மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக திட்ட பொறுப்பாளர், பொறியாளர் , ஹைட்ராலிக் ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 3பேர் மீது வழக்குப்பதிவு. இந்நிலையில் ஒப்பந்ததாரின் அஜாகரதை காரணமாக தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

 



மதுரையிலிருந்து செட்டிக்குளம் வரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் 7.5 கி.மீட்டர் நீளத்தில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழி மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த மூன்று வருடங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஐய்யர்பங்களா அருகே நாராயணபுரம் பேங்க் காலனி பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும் போது ஹைட்ராலிக் இயந்திரம் பழுது காரணமாக பாலத்தின் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.  இதில் அங்கு பணியில் இருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளர் சம்பவ  இடத்திலயே உயிரிழந்தார். இதனையடுத்து கட்டிட இடிபாட்டில் சிக்கிய மேலும் ஒரு தொழிலாளர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். .



இதையடுத்து  மேம்பாலம் கட்டுமான பணியின்போது ஏற்பட்ட விபத்து தொடர்பாக மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஜே.எம்.சி ப்ராஜெக்ட்  இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின் கட்டுமானப்பணிகள் பணிகளின் பொறியாளர் ஜதேந்தர் வர்மா, ஹைட்ராலிக்  மெஷின்களை ஒப்பந்தந்திற்கு வழங்கியிருக்கும்  ஷெல் மேக் நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது ஐ.பி.சி 287 அஜாக்கிரதையாக இயந்திரங்களை கையாள்வது, 304 (ஏ) விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தல்லாக்குளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

 

இதனிடையே விபத்து நடைபெற்ற  பகுதியில் கீழே விழுந்துள்ள தூண்களை அகற்றும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. தொடர்ச்சியாக பாலத்தின் பணிகள் நடைபெறும் பகுதிகள் முழுவதிலும் அதிகாரிகளும் அமைச்சர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



இன்று மதுரை வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் பாலம் இடிபாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார் அப்போது செய்தியாளர்களிடம், “விபத்து ஒப்பந்ததாரர் அஜாக்கிரதை காரணமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த பாலம் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் ஒன்றிய அரசின் கீழ் நடைபெறுகிறது. இருப்பினும் தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதால் இதற்கு முக்கியதுவம் கொடுக்கிறோம். இந்த விபத்திற்கு இதன் ஒப்பந்ததாரர் தான் முழு காரணம். ஒரு எஞ்ஜினியர் தலைமையில் மேற்பார்வையிடாமல் மெத்தனமாக வேலை செய்துள்ளனர் அதனால் ஒரு தொழிலாளி உயிரிழந்துவிட்டார். இதில் கண்டிப்பாக ஒப்பந்தகாரர் மீது நடவடிக்கை தேவை" என்றார்