உயரமான மலைச்சிகரங்களுக்கு நடுவில் உள்ள பெரும் பள்ளத்தாக்குப் பகுதியே மேகமலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்தப் பள்ளத்தாக்குப் பகுதி. ஆங்கிலேயர்கள் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க மேகமலையைத் தேர்ந்தெடுத்தனர். மேகமலை பகுதிகளில் முழுவதும் காப்பி, தேயிலை போன்றவைகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேகமலை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளதால், கண்களை கவரும் தேயிலைத் தோட்டங்களும், வருடந்தோறும் இங்கு எப்போதும் குளுமையான சூழலும் நிலவி வரும்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேகமலை என்னும் அழகிய மலைக்கிராமம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒரு அழகிய நில அமைப்பை கொண்ட இடம். மேகமலைக்கு செல்லும் வழியில் சாலையோரங்களில் திராட்சை தோட்டங்களும், தென்னை மரங்களும், காற்றாலைகளும் நிறைந்த கிராமச் சாலைகளில் செல்லும் போதே, மேகங்கள் நம்மை வரவேற்கும்.
சின்னமனூர் அருகே தென்பழனி என்ற இடத்தில் இருந்து மலைவழிச்சாலை துவங்கும். மேகமலை ஒரு பாதுகாகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் செல்லும் வழியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் நமது விபரங்களை பதிவு செய்துவிட்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது வனத்துறை. மேகமலை செல்வோர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மலைப் பாதையில் வாகன ஓட்டிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தேனி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் தேர்ந்தெடுப்பது மேகமலை தான். சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் மேகமலையில் தற்போது கோடைகால சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கியுள்ளது. கோடைகாலம் நெருங்கியுள்ள நிலையில், தேனி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சின்னமனுார் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாறு, மணலாறு, அப்பர் மணலாறு மற்றும் இரவங்கலாறு மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாகவே காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயில் காலங்களில் கூட இங்கு வெயிலின் தாக்கம் குறைந்திருக்கும். ஆனால் சென்ற வருடமும் , இந்த வருடத்தில் ஆரம்ப கட்டத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் வெயிலின் தாக்கத்திற்கு வனப்பகுதிகளில். தண்ணீர் போன்ற உணவுகள் கிடைக்காததால் காட்டு விலங்குகள் யானை உட்பட ஊருக்குள் வந்து விடும் என்ற அச்சத்திலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்தில் உள்ளனர். மேலும் மேக மலைப்பகுதியில் அவ்வப்போது குளிர்ச்சியான காற்றும் வெயிலும் மாறி மாறி நிலவி வருவதால், வானிலை மாற்றத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். மேகமலை பகுதிகளில் இரவு வேளைகளில் உறைபனி நிலவுவது பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயில், குளிர் போன்ற இரு சூழல்களையும் அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் வருகை கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சற்று அதிகரித்துள்ளது என மேகமலை பகுதி மக்கள் கூறினர்.