மத்திய அரசின் கடந்த நிதிநிலை அறிக்கையில் ஜவுளித்துறைக்கு ஏராளமான நிதிகளை ஒதுக்கீடு செய்தது. அதில் விருதுநகர் மாவட்டத்தில் மெகா ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
மத்திய ஜவுளிப்பூங்கா:
இந்த ஜவுளிப்பூங்கா ரூபாய் 10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், விருதுநகரில் அமைய உள்ள இந்த மெகா ஜவுளிப் பூங்காவிற்கு ரூபாய் 1894 கோடி முதற்கட்டமாக ஒதுக்கி மத்திய டெக்ஸ்டைல் துறை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மித்ரா பூங்கா திட்டத்தின் கீழ் அமைய உள்ள இந்த ஜவுளிப்பூங்கா மூலம் விருதுநகரின் தொழிற்வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜவுளிப்பூங்கா மொத்தம் 1052 ஏக்கரில் அமைய உள்ளது. அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் இந்த பூங்காவை அரசு அமைக்க உள்ளது.
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு:
13 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த தொழிற்பூங்கா செயல்பாட்டிற்கு வருவதன்மூலம் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இங்கு பணியாற்ற உள்ள தொழிலாளர்களின் வசதிக்காக 10 ஆயிரம் படுக்கைகள் வசதிகளுடன் தொழிலாளர் தங்கும் விடுதியும் கட்டப்படுகிறது.
இந்த ஜவுளிப் பூங்கா பயன்பாட்டிற்காக தினசரி 15 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையமும், 5 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட உள்ளது. இந்த ஜவுளிப்பூங்காவை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசுடன் தமிழ்நாடு தொழில்துறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
2026ம் ஆண்டு
இந்த மெகா ஜவுளிப்பூங்காவின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், அனைத்து பணிகளும் அடுத்தாண்டு அதாவது 2026ம் ஆண்டு செப்டம்பருக்குள் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜவுளிப்பூங்காவிற்கு தற்போது 1894 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதன் மூலம் தொடர்ந்து பணிகள் மும்முரமாக இனி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறையினர் மகிழ்ச்சி:
இந்த ஜவுளிப்பூங்கா செயல்பாட்டிற்கு வந்தால் விருதுநகர் மாவட்டத்தின் தொழிற்வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும் என்று அந்த பகுதி வியாபாரிகள், தொழில்நிபுணர்கள் மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளனர். விருதுநகர் ஜவுளிப்பூங்கா மட்டுமின்றி பரமக்குடி - ராமநாதபுரம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என்று கருதப்படுகிறது,