சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது.
லாக்கப் மரணம்:
நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையில் அஜித்குமார் மீது போலீசார் பைப்களை வைத்து சரமாரியாக அடித்த வீடியோ சமர்ப்பிக்கப்பட்டதுடன், அவரது உடலில் 44 இடங்களில் காயங்கள் இருந்ததும் பிரேத பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களும், ஆவணங்களும் நீதிபதிகளையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
விசாரணையில் நடந்தது என்ன?
இந்த நிலையில், அஜித்குமாருடன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன்குமார் அன்று என்ன நடந்தது? என்பதை தனியார் வார இதழுக்கு பேட்டியாக அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் எங்களை வளத்தாங்க. அஜித் மடப்புரம் கோயிலுக்கு செக்யூரிட்டி வேலைக்கு கொஞ்ச நாளாதான் போயிகிட்டு இருந்தான்.
அஜித்தையும், என்னையும், காரை பார்க்கிங் செய்தவரையும் பல இடங்களுக்கு கூப்பிட்டு போயி கண்டபடி போலீஸ் எங்களை அடிச்சாங்க. எங்களுக்கும், இந்த திருட்டுச் சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. நாங்கள் கதறியும் அவங்க விடாம எங்களை அடிச்சாங்க.
தண்ணி கூட கொடுக்கல:
அப்புறம் என்னை மட்டும் விட்டுட்டாங்க. அஜித்துக்க தண்ணி கூட கொடுக்காம கண்டபடி போலீஸ் அவனை அடிச்சாங்க. அவனுக்கு எந்த நோயும் இல்ல. அஜித் வலி தாங்க முடியாமல்தான் உயிரிழந்திருக்கான். எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
என்று கண்ணீர்மல்க பேட்டி அளித்துள்ளார்.
போலீசார் கைது:
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ள இந்த காவல்நிலைய மரணத்தில் தொடர்புடைய போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். டிஎஸ்பி சண்முக சுந்தரமும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிறப்புறுப்பில் மிளகாய் பொடி:
அஜித்குமாரை போலீசார் விசாரணையின்போது அவரை செருப்பு காலால் எட்டி, உதைத்தும், அவருக்கு தண்ணீர் கொடுக்காமல் அவரது வாய், காது மட்டுமின்றி பிறப்பு உறுப்புகளில் மிளகாய் பொடி தூவி விசாரணை என்ற பெயரில் சித்ரவரதை செய்துள்ளனர். இந்த வழக்கி்ல தவறு செய்த போலீசாருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த வழக்கில் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.