மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த குத்துச் சண்டை வீரர்  கணேஷ் ஆகாஷ் (21 ) என்ற அமெரிக்கன் கல்லூரி மாணவர் குத்துச் சண்டையில் தேசிய அளவில் தங்கம், ஜூடோ மற்றும் ரைபிள் ஷூட்டிங்கில் மாநில அளவிலான போட்டிகளில் பதக்கங்களை பெற்றவர்.






இந்த நிலையில் இவர் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்து வந்துள்ளார். அதில், தான் பயின்ற குத்துசண்டை உடன் இணைத்து 10 பவுண்ட் தம்புல்ஸை கொண்டு 20 வினாடிகளில் 60 பன்ச் செய்து புதிய உலக சாதனை படைப்பதற்காக கடந்த சில தினங்களாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து, உலக சாதனை புத்தகங்களான கலாம் புக் ஒப் ரெகார்ட் மற்றும் கின்னஸ் புக் ஆஃ ரெக்கார்டு ஆகியவற்றில் பதிவு செய்து 10 பவுண்ட் தம்புல்ஸை கொண்டு 20 வினாடிகளில் 60 பன்ச் செய்வதை வீடியோவாக பதிவு செய்து அவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.



 

அதனை அங்கீகரித்து கலாம் புக் ஆஃ ரெக்கார்டு சென்னையில் இவரை அழைத்து அங்கீகரித்து அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து கெளரவ படுத்தி உள்ளது. இவர் குத்து சண்டை பயிற்சிக்காக தம்பிலை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்வதையே  தற்போதைய உலக சாதனையாக மாற்றியுள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

 

இது குறித்து குத்துச் சண்டை வீரர் கணேஷ் ஆகாஷ் கூறுகையில், பயிற்சி, முயற்சி இருந்தால் கண்டிப்பாக எல்லாத்துறையிலும் வெற்றி பெறலாம் என்பதை எண்ணி எனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறேன். குத்துச் சண்டை தொடர்பாக ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என தம்பில் மூலம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். தொடர் பயிற்சி எனக்கு ஊக்கத்தை கொடுத்தது. அது தற்போது அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து இது போன்ற சாதனைகளை செய்வேன் என தெரிவித்தார்.