கடந்த சில நாட்களாக தொடர் கனமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தண்ணீர் அதிகமாக செல்வதால், வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இரு கரையை உரசியவாறு தண்ணீர் ஆர்பரித்து செல்கிறது.






 


 

மேலும், மதுரை, சிவகங்கை,  மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிக்கு தற்போது வைகை அணையில் இருந்து 7 மதகு கண் வழியாக நேற்றில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 2,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியுள்ள நீர்பிடிப்பு பகுதிகளான வருசநாடு, வெள்ளிமலை, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாகவும் வெளியேறும் உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 


 

இதன் காரணமாக மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் வைகை ஆற்றின் இருகரைகளை தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மெலும் யானைக்கல் தரைப்பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை வைகையாற்று பகுதி மக்களுக்கு வைகை ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





 

நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் கால்நடைகளை பாதுகாப்பு பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிட வேண்டாம் எனவும், நீர்நிலைகளின் அருகில் கால்நடைகளை கட்டிவைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.