மதுரை: மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடை தவெக தலைவர் விஜய் கொடியேற்றி துவக்கி வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு
மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் நடந்த முதல் மாநாட்டை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமானது. இதில் விஜய் என்னென்ன விஷயங்களை பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் குவிந்துள்ளனர். முதலாவதாக மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது, தவெக தலைவர் விஜயின் மாநாட்டு மேடைக்கு, அவரின் பெற்றோர் ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் வருகை தந்துள்ளனர்.
கொள்கை தலைவர்களுக்கு விஜய் மரியாதை
மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படத்துக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மேடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கம்பத்தில் தவெக கட்சிக் கொடியை விஜய் ஏற்றினார்.
சொதப்பிய பாதுகாப்பு குழு
மேடைக்கு வந்த தவெக தலைவர் விஜய் சுமார் 800 மீட்டர் ரேம்ப் வாக் நடத்து சென்று தொண்டர்களை பார்த்தார், தலைவர் விஜய் ரெம்ப் வாக் செல்லும் போது பணியில் இருந்த பவுன்சர்கள் மற்றும் பாதுகாப்பு குழுவினர் சொதப்பியதால் கீழே இருந்த தொண்டர்கள் தடுப்பு வேலிகளை எகிறி குதித்து ரேம்ப் வாக் மேடையின் மீது ஏறியதால் பதற்றம் நிலவியது. உடன் வந்து பாதுகாப்பு படையினர் மற்றும் பவுன்சர்கள் அவர்களை அகற்ற முயற்சி செய்தபோது தள்ளுமுள்ளு நிலவியது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மாநாடு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பவுன்சர்கள் சொதப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாநாடு 600 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. மாநாட்டிற்காக 500 பேர் அமரக்கூடிய மேடை, 350 மீட்டர் நீளமுள்ள ராம்ப் வாக் மேடை, 400 கழிவறைகள், 25 கிலோ எடை சுமக்கும் ட்ரோன்கள் மூலம் மருந்து மற்றும் தண்ணீர் விநியோகம், 200-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள், மற்றும் 2500-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் உள்ளிட்டவை அடங்கும்.
மாநாட்டில் பங்கேற்க லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டு, விஜய்யின் அரசியல் உரை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் போதுமானதாக இல்லாததால் தொண்டர்கள் சில அவதிகளை எதிர்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் முதல் மாநாடு விழுப்புரம், விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடைபெற்றது, இது அவரது அரசியல் பயணத்தில் முக்கியமான நிகழ்வாக அமைந்தது. இந்த இரண்டாவது மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தவெக-வின் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்காக 6 தனி பார்க்கிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, மற்றும் பொதுமக்களுக்கு 7 வழிகளும், விஜய்யின் வருகைக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு தமிழக அரசியல் களத்தில் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகளை வரையறுக்கும் முக்கிய நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட கட்சிகள் தோற்றுவிட்டன- அருண்ராஜ்
மாநாட்டில் பேசிய தவெக நிர்வாகி அருண்ராஜ் கூறியதாவது:-திராவிட கட்சிகள் தோற்றுவிட்டன. பேரறிஞர் அண்ணா தன்னுடைய குடும்பத்துக்கு எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை. அவருக்கு கடன் இருந்தது. இன்றைய திமுகவினர் நிலை என்ன? இன்னும் இரண்டு அமலாக்கத்துறை சோதனை நடந்தால், பாஜகவுடன் கூட்டணி ஆட்சி தேவை என்று சொன்னாலும் சொல்வார்கள். பிளவுவாத சக்திகளை எதிர்க்க வேண்டும் என்றால் சமரசமில்லாத கொள்கை வேண்டும். அதற்கு தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே ஒரே நம்பிக்கை. இவ்வாறு அவர் பேசினார்.