தனியார் வங்கியில் வாங்கிய லோனை கட்ட கூறி ஊழியர் வீட்டிற்கு வந்து  கேட்டதால் மன உளைச்சலில் ஊறுகாய் வியாபாரி தனது இரண்டு பெண் குழந்தைகள் ஒரு மகன் உட்பட 5 பேர் விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இரண்டு வங்கியில் வாங்கிய லோன்

 

மதுரை திருமங்கலம் அடுத்த ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி 41. இவரது மனைவி சிவஜோதி 32. இத்தம்பதியினருக்கு ஜனார்த்தனன் 14, தர்ஷனா 12, தர்ஷிகா 12 என மூன்று குழந்தைகள் உள்ளனர். தர்ஷனா, தர்ஷிகா இருவரும் இரட்டைக் குழந்தைகள். பிள்ளைகள் மூவரும் கரடிக்கல்  அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பால்பாண்டி சொந்தமாக  வியாபாரம் செய்வதற்காக இரண்டு தனியார் வங்கிகளில் தனது மனைவி சிவஜோதி பெயரில் 8 லட்ச ரூபாய் மற்றும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என கடன் வாங்கி உள்ளனர். வாங்கிய பணத்தில் சிவ ஜோதி என்ற பெயரில் ஊராண்ட உரப்பனூரில் ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் வாங்கிய கடனை முறையாக செலுத்திய நிலையில் 2,40,000 பெற்ற தனியார் வங்கிக்கு முறையாக பணம் செலுத்தவில்லை எனக் கூறி ஊழியர்கள் கடந்த பத்தாம் தேதி வீட்டிற்கு வந்து சத்தமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

விஷ மருந்து குடித்து தற்கொலை முயற்சி

 

தொடர்ந்து செல்போனில் வழியாக.., அவ்வப்போது சத்தமிட்டு சில நாட்களில் பணத்தை செலுத்தவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பதாக நெருக்கடி கொடுத்து மிரட்டும் தோணியில் பேசியதாக சொல்லப்படுகிறது. பணத்தை திரும்ப செலுத்த பல இடங்களிலும் கேட்டும் கிடைக்காத சூழலில், மனவிரக்தி அடைந்த பால்பாண்டி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் கடையில் ஒரு கிலோ குருணை மருந்து வாங்கி வந்து  கணவன், மனைவி பிள்ளைகள் மூன்று பேர் என 5 பேரும் இரவில் மருந்தை குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளனர். காலை 7 மணிக்கு ஆட்டோவில் வந்த பால்பாண்டி குடும்பத்தினர் மகள் வாந்தி எடுப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து ஒவ்வொருவராக வாந்தி எடுத்ததால் மருத்துவர்கள் விசாரித்தபோது விஷம் அருந்தியதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து ஐந்து பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து ஐந்து பேருக்கும் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

மருத்துவமனையில் சிகிச்சை

 

தற்போது அவர்கள் 5 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் பரிசோதனைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாபாரத்திற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் பணத்தை திரும்ப செலுத்த கூறி வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷ மருந்தி தற்கொலை முயற்சி ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்


இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.