மதுரை டைடல் பூங்காவிற்கு வரும் 13- ஆம் தேதி முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். 18 மாதங்களில் கட்டுமானப் பணிகள் முடிகிறது.
மதுரையில் அமைகிறது டைடல் பூங்கா
தமிழகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் டைடல் பூங்கா உருவாக்கி இருப்பதை போல மதுரை மாநகராட்சியுடன் இணைந்து டைடல் பார்க் அமைக்கப்படும் என சட்ட மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு அதற்காக சோதனைப் பணிகளும் செய்யப்பட்டுவிட்டன. இதன் முழுவீச்சு பணியாக மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மற்றும் நெல் வணிக வளாகத்திற்கு இடையில் மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தை டைடல் பூங்காவிற்காக மதுரை மாநகராட்சி தரப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் சுமார் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 12 தளங்களுடன் கூடிய மதுரை டைடல் பூங்காவிற்கான நிர்வாகரீதியான பணிகள் நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலை வாய்ப்பு
கட்டடம் கட்டுவதற்கானபணிக்கான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூபாய் 289 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள இந்த டைடல் பூங்காவில், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5000 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை வேலை வாய்ப்பு பெற உள்ளனர். இத்திட்டத்திற்கு சுற்றுச் சூழல்தாக்க மதிப்பீட்டு ஆணையமும் அனுமதி அளித்துள்ளது. பின்னர், சிறு திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு அதற்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது. ஒரே பிளாக் என்ற அடிப்படையில் 72 மீட்டர் நீளத்திற்கு கட்டுமானம் மேற்கொள்ளவுள்ள வரை தரைத்தளம் மட்டும் 4,008.71 சதுர அடியில் அமைகிறது.
விரைவில் பணிகள்
மதுரை மாநகராட்சி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மறுசுழற்சி முறையில் 234 கே.எல்.டி தண்ணீர் உற்பத்தி செய்யப்படும். 164 எம்-3 கொள்ளளவுள்ள மழைநீர் வடிகால் முறை அமைகிறது. அனைத்துவித மான முன்னேற்பாடு பணி கள் நிறைவடைந்துள்ள நிலையில், மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிக்கான துவக்கவிழா 13.02.2025 நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்சில் கட்டுமானப் பணியை துவக்கி வைக்கிறார். இதையடுத்து, டைடல் பார்க் அமையவுள்ள பகுதியில் தேவையற்ற மரங்கள் அகற்றுதல், கற்கள், குப்பைகள் கழிவுப்பொருட்களை வெளியேற்றுதல், தேவையான இடங்களில் பள்ளம் தோண்டுதல் உள்ளிட்ட பணிகளை கட்டுமான நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த பணிகள் அடிக்கல் நாட்டியதில் இருந்து 18 மாதங்களில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனவும் சொல்லப்படுகிறது.
மதுரை அடுத்தக்கட்ட வளர்ச்சி பெறுவதை சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் வரவேற்று வருகின்றனர். இதனால் பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் இதனால் பெரும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.