தமிழகம் முழுவதுமுள்ள சிவ ஆலயங்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்ற நிலையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர். 


ஆருத்ரா தரிசனம் 


மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. சிவ பெருமானுக்கு உரியதாக கொண்டாடப்படும் இந்த நட்சத்திர நாளில் தான் சிவபெருமான் தன் ருத்ரதாண்டவத்தை நிகழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றது.சில முனிவர்கள்  சிவ பெருமானுக்கு எதிராக வேள்வி நடத்தினர். அப்போது அவர்களது இல்லங்களுக்கு யாசகம் கேட்பவர் போன்று சென்றார்.  இதனையறிந்த முனிவர்கள் புலி, உடுக்கை, நாகம் போன்றவற்றை யாகத்தில் உருவாக்கி  அவற்றை சிவபெருமான் மீது  ஏவி விட்டனர். அவற்றை தனது அணிகலன்களாக ஆக்கிக் கொண்ட சிவபெருமான், முனிவர்கள் ஏவி விட்ட யானையை மிதித்து பாதாளத்தில் அழுத்தி, ஒரு காலை தூக்கி, தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டினார். 


இந்த சம்பவத்தால் மனம் திருந்திய முனிவர்கள் தங்களது ஆணவத்தை கைவிட்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். அதேசமயம் இந்த காட்சியை உலக மக்களும் காண வேண்டும் என முனிவர்கள் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர். அதன்  காரணமாக மார்கழி திருவாதிரை நாளில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. 


திருவாதிரை களி 


சேந்தனார் என்ற சிவபக்தர் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளிக்காமல் சாப்பிடுவதில்லை என உறுதியாக இருக்கிறார். விறகு வெட்டி அதில் வரும் பணத்தை கொண்டு வாழும் அவருக்கு, ஒருநாள் மழையால் விறகு நனைந்ததால், அதனை விற்க முடியவில்லை. அப்போது சிவனடியார் ஒருவர் பசிக்காக அவரை நாடுகிறார். வீட்டில் எந்த பொருட்களும் இல்லாததால் இருப்பதை கொண்டு களி செய்து சிவனடியார் பசியை நந்தனார் போக்கினார். மறுநாள் கோவிலில் களியும், அதனுடன் வைக்கப்பட்ட கூட்டும் சிதறி கிடந்ததை கண்டு சேந்தனார் தனது பக்தியை சோதனை செய்யவே சிவபெருமான அடியாராக வந்ததை அறிந்து கொண்டார். இதனால் தான் திருவாதிரை நாளில் களி செய்து படைக்கப்படுகிறது. 


விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம் 


நடப்பாண்டுக்கான மார்கழி திருவாதிரை விழா இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிவ ஆலயங்களில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதனைத் தொடர்ந்து  சிவபெருமானின் பஞ்ச சபைகளில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையும் ஏராளமான பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தனர்.


அதன்படி சிதம்பரம் (பொற்சபை), மதுரை (வெள்ளி சபை), திருநெல்வேலி (தாமிர சபை), குற்றாலம் (சித்திர சபை), திருவாலங்காடு (இரத்தின சபை)  ஆகிய பஞ்ச சபைகளிலும் சிவபெருமானுக்கு திருவாதிரை களி படைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் விழா கொண்டாடப்பட்டது. பஞ்ச சபைகளில் ஆருத்ரா தரிசனம் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் , போடி சுப்பிரமணிய சுவாமி கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. 


இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்களநாதர் கோயிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும். அதன்படி நேற்று திறக்கப்பட்டு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.