மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயதுடைய இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் சென்றதாக கூறப்பட்ட நிலையில் சிறுமி கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் அப்பெண் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடையவே, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக இருந்த நாகூர் ஹனிபா உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.  மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




இந்த நிலையில்  நான்கு வழிச்சாலையில் நேற்று பிற்பகலில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசியதால் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் பயணி ஒருவருக்கு காயமும் ஏற்பட்டது. தும்பைபட்டியில் பதட்டம் ஏற்படவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடம் விசாரணை நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். சுமார் 3 மணி நேரமாக பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் நீதி கேட்டு மாலையில் மதுரை – திருச்சி தேசிய நான்கு வழிச்சாலையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.




இதனையடுத்து அங்கு வந்த முவேந்தர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டார். இதனையடுத்து மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இந்த நிலையில் காவல்த்துறையினரிடம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் ஸ்ரீதர் வாண்டையார் கைது செய்து அழைத்து செல்லப்பட்டார் . அப்போது திடிரென கல்வீச்சு சம்பவங்கள் நேரிட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்த ஆரம்பித்தனர். இதனையடுத்து கூட்டம் அங்கிருந்து கலைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் கிராமத்தில் கூடுதலாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Gokulraj murder case: டோல்கேட் பாஸ் கூட கொடுக்கல.. ஆனாலும் என் கடமை.. கவனிக்க வைத்த கோகுல்ராஜ் தரப்பு வக்கீல்!