தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பரவலாக பெய்து வந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நேற்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் சூழலில், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மழையின் தன்மை குறித்து ஆய்வு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். கரூர், திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர் கனமழை
தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்திற்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், திருநெல்வேலியில் 5ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு தொடங்கி காலை வரை தொடரும் பரவலான மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையில் மாணாக்கர் சிரமம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மாணாக்கர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் செயலுக்கு கல்வியாளர்கள் பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
மதுரை மாநகர் பகுதியில் நள்ளிரவு முதல் காலை வரை மாநகரின் மையப் பகுதியான சிம்மக்கல், புதூர், காளவாசல், ஆனையூர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்துவருகிறது. நள்ளிரவு தொடங்கி காலை வரை தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காத நிலையில் மாணாக்கர்கள் கடும் சிரமத்துடன் பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து பரவலான மழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் செல்வதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Chembarambakkam Lake: ஓயாத மழை! 22 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் - நடக்கப்போவது என்ன?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Rains: சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளுக்கும் மழை! அடுத்த 5 நாள் இதுதான் நிலவரம்!