மதுரையில் வீட்டிற்குள் புகுந்து பள்ளி சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்து குதறிய தெரு நாய் - பயத்தில் அலறி ஓடிய குடும்பத்தினர் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி
தெருநாய்களுக்கு ரேபிஸ் தொற்று
கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தெருநாய்களின் தொல்லை அதிகளவு உள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது. தாங்கள் விரும்பும் செல்லப் பிராணிகளை வளர்க்கும் நபர்கள், அதனை தொடர்ந்து கவனிக்க முடியாமல் தெருக்களிலும், காட்டுப் பகுதிகளிலும் விட்டுச் செல்கின்றனர். இப்படியாக தெருநாய்கள் அதிகரித்து பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக கால்நடை பராமரிப்புத் துறையினர் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில் நாய் இனப்பெருக்கம் செய்து தற்போது தெருக்களை ஆக்கிரமித்து ஆட்சி செய்கிறது. இதைக் கடந்து வீட்டிற்கு செல்வது மிகப்பெரும் சவாலாக அமைகிறது. இதில் எந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவிற்கு பொதுமக்கள் அஞ்சி பதற்றத்துடன் வீடு சென்று நிம்மதி அடைகின்றனர். இப்படியான சூழ்நிலையை தான் நாள்தோறும் அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் தெரு நாய் ஒன்று வீட்டிற்குள் புகுந்து பள்ளி சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது, பயத்தில் குடும்பத்தினர் அலறி ஓடிய சி.சி.டி.வி., காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் அலறல் சத்தம்
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே லேக் ஏரியா 15- ஆவது தெருவை சேர்ந்தவர் முத்துச்சாமி (40). இவரது மகனான 8 வயது சிறுவன் செந்தில் காலை பள்ளி செல்வதற்கு தயாராக குளியலறைக்கு சென்றார். அப்போது திறந்திருந்த காம்பவுண்ட் கதவு வழியாக புகுந்த தெருநாய் ஒன்று, குளியலறை அருகில் நின்றிருந்த சிறுவன் செந்திலை கை, கால், தொடையில் கடித்து குதறியது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு தந்தை முத்துச்சாமி உள்பட குடும்பத்தினர் வெளியில் ஓடி வந்தனர்.
நாய் விரட்டி, விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த நாய், அவர்களையும் விரட்டி கடித்தது. இதில் முத்துச்சாமிக்கு கால், தொடையில் நாய் கடித்து ரத்தம் கொட்டியது. பின்னர் தகவலின் பேரில் மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறையின் நாய் பிடிக்கும் வண்டி வந்து ஒரு மணிநேரம் போராடி நாயை பிடித்தனர். காயமடைந்த சிறுவனுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் 3 இடங்களில் தையல் போட்டு தடுப்பூசி செலுத்தினர். இதனிடையே, இவர்களை நாய் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,