தீபாவளி, பொங்கல் நாளில் கூட வீட்டில் சாப்பிடாமல் பட்டினியோடு படித்து நினைத்ததை சாதித்தான் எனது மகன் என்பதே எனக்கு பெருமை. அவனது ஊதியத்தை ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதே எனது ஆசை  என மதுரை மாணவர் சங்கரபாண்டிய ராஜின் தாயார் பேட்டியளித்தார்.

UPSC மெயின் தேர்வில் தமிழ் வழியில் தேர்ச்சி
 
மதுரை மாநகர் பீ.பி.குளம் நேதாஜி மெயின் வீதி பகுதியை சேர்ந்த டெய்லரான ராமலட்சுமி என்பவரது மகனாகிய சங்கர்பாண்டியராஜன் UPSC மெயின் தேர்வில் தமிழ் வழியில் படித்து எழுதி அகில இந்திய அளவில் 807-வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது தாயாருக்கு போன் மூலமாக தெரிவித்தபோது உற்சாகத்தில் மகிழ்ந்த ராமலெட்சுமிக்கு அருகில் உள்ளவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் சங்கரபாண்டியராஜின் சகோதரி மற்றும் குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர். தனது மகன் அவரது லட்சியமான UPSC தேர்வை தமிழ்வழி தேர்வில் எழுதி வெற்றிபெற வேண்டும் என்பதை நிறைவேற்றியுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
 
சகாயம், அப்துல்கலாம் போல பணியாற்ற ஆசை
 
இது குறித்து பேசிய சங்கரபாண்டியராஜனின் தாயார் ராமலட்சுமி..,” எனது மகனுக்கு சிறுவயதில் இருந்தே UPSC தேர்வில் தேர்வாகி சகாயம், அப்துல்கலாம் போல பணியாற்ற வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றியுள்ளார். அரசு பள்ளியில் தமிழ்வழி படித்து தொடர்ந்து கல்லூரி படிப்பை தொலை தூரக்கல்வி மூலமாக படித்து முடித்தார். பின்னர் மதுரையிலிருந்து சென்னை சென்று அங்கு தங்கி படித்தார். இதனிடையே அங்கு  டியூசன் எடுத்து அதில் கிடைத்த வருமானம் மூலமாகவே UPSC தேர்வு எழுதிவந்தார். இருமுறை UPSC மெயின் தேர்வு எழுதி தவறவிட்டபோதும், இந்த முறை எழுதி வெற்றிபெற்றார். எனது மகன் சிறு வயதில் அரசு பள்ளியில் படிக்கும் போது அவருக்கான நோட்டுப் புத்தகம் பேனா பென்சில் வாங்குவதற்காக சில அமைப்புகள் நடத்திய விழாவின்போது நீண்ட நேரம் காத்திருந்து வாங்கி வந்து என் மகனை படிக்க வைத்தேன். 
 
நான் முதல்வன் திட்டம் உதவி
 
அரசுப் பள்ளியில் தமிழ் வழி கல்வியில் படிக்க வேண்டும் என நினைத்து அதில் தற்போது அவர் வெற்றியும் பெற்றுள்ளது, ஒட்டுமொத்தமாக உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசுப் பள்ளியை இழிவாக பேசக்கூடிய நபர்கள் அரசு பள்ளியில் படித்தால் இது போன்று யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறலாம். தமிழ் வழியில் படித்து வெற்றி பெறலாம் என அனைவருக்கும் தெரிய வேண்டும். மேலும் எனது மகன் சங்கர பாண்டியராஜன் அரசுப் பள்ளி படித்து ஏற்கனவே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பள்ளிகல்வித்துறையில் வேலை கிடைத்தபோதும், அதில் கிடைத்த ஊதியத்தை வாங்காமல் ஆறு மாதம் விடுமுறை எடுத்து யூபிஎஸ்சி தேர்வு எழுதி தற்போது அதில் வெற்றி பெற்றுள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இதற்கு காரணம் நான் முதல்வன் திட்டம் தான். இதனால் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நன்றி.
 
மகிழ்ச்சி அடைகிறேன்
 
ஒரு தாயாக இது போன்ற  அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக எனது மகன் இருப்பதோடு மட்டுமல்லாமல் ஊதியத்தை விட ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது பெரிது என நினைக்கிறேன். மேலும் எனது மகன் படிக்கும் காலத்தில்  தொடர்ந்து படித்து வந்தார். இதனால் தீபாவளி பொங்கல்  நாட்களுக்கு கூட சொந்த ஊருக்கு வராமல் சென்னையிலிருந்து மிகுந்த கஷ்டத்தோடு உணவின்றி, பசியை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இது ஒரு தாயாக மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. டெய்லர் அக்கா மகன் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுவிட்டான் என ஒவ்வொருவரும் கூறும்போது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்தார்.