மதுரை மேலூர் அரிட்டாபட்டியை பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க, கடந்த 2019-ல் நடவடிக்கை துவங்கியது. கிராம ஊராட்சிகள், மாநில தொல்லியல் துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் போன்ற பல துறைகளின் ஆலோசனைக்கு பின், பல்லுயிர் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன், பல்லுயிர் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும், இப்பகுதியில் வளமான உயிரியல் மற்றும் வரலாற்று களஞ்சியத்தை பாதுகாக்க உதவும் என வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சார்பில் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் அரிட்டாபட்டி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்த பகுதியை மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய மண்டலமாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் அறிவித்த பசுமை தமிழகம் திட்டத்தின்படி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் வைத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
வழிகாட்டி மணிகண்டன் தனது தனிப்பட்ட சேமிப்பு மூலம் மரக்கன்றுகள் வாங்கி அவற்றை அரிட்டாபட்டி பகுதி இளைஞர்களிடம் வழங்கி மலையடிவார இடங்களில் நடவு செய்யும் வகையில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வழிகாட்டி மணிகண்டன் பேசுகையில், “மாநில அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் சுற்றுச்சூழல் மீது மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்துவோம்” என்றார். மேலும் இப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் ஹரிபாபு, இயற்கை ஆர்வலர்கள் செந்தில்குமார், அசோக்குமார், ரமேஷ்குமார், சதீஷ்குமார், பெரியதுரை உள்ளிட்ட கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இத மிஸ் பண்ணீராதீங்க ப்ளீஸ் - ஒருவர் கை பக்குவத்தில் ஊரே சமைக்கும் எண்ணெய் சுக்கா! இது தான் மதுரையோடு பக்கா!
.