எம்ஜிஆர் உடன் விஜய் தன்னை ஒப்பிடுவது தவறு, திடீர் சாம்பார், பாஸ்ட் புட் போல திடீரென முதலமைச்சராக நினைக்கிறார் விஜய் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆரை எல்லோரும் கொண்டாடலாம், தவறில்லை.
மதுரையில் அ.தி.மு.க., பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 1 - 4 வரை மேற்கொள்ளவுள்ள பரப்புரை பயணத்துக்கு அனுமதி கேட்டு காவல் ஆணையரிடம் மனு அளித்த பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில்..,"தமிழ்நாட்டில் ஒரு எம்.ஜி.ஆர் தான். எத்தனை பேர் தான் தன்னை எம்ஜிஆர் என சொல்வார்கள்? எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக இயங்கி வருகிறது. அரசியலுக்கு புதிதாக வருகிறவர்கள் எல்லோரும் தன்னை எம்ஜிஆர் என சொல்லிக் கொள்வது வழக்கம் தான். எம்ஜிஆரை எல்லோரும் கொண்டாடலாம், தவறில்லை.
எம்ஜிஆர் போல விஜய் உழைத்து படிப்படியாக மேலே வரவில்லை
திடீர் சாம்பார், திடீர் பாஸ்ட் புட் மாதிரி நேராக நான் கோட்டைக்கு தான் செல்வேன் என விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். விஜய் படிக்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. எம்ஜிஆர் உடன் விஜய் தன்னை ஒப்பிடுவது தவறு. எம்ஜிஆர் போல விஜய் உழைத்து படிப்படியாக மேலே வரவில்லை. உடனடியாக மேலே வர நினைக்கிறார். இன்றைக்கு அதிமுகவிற்கு என்று கொள்கை உள்ளது. வாரிசு அரசியலை ஒழிக்கவும், லஞ்சம் லாவண்யம் இல்லாத, ஊழல் இல்லாத அரசை உருவாக்கி தர வேண்டும் என்று புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை தோற்றுவித்தார். எம்ஜிஆர் இருக்கும் பொழுது 17 லட்சம் தொண்டர்கள் இருந்தார்கள், அம்மா இருக்கும்போது ஒன்னரை கோடி தொண்டர்கள் இருந்தார்கள், தற்போது எடப்பாடியார் 2 கோடி தொண்டர்களை உருவாக்கியுள்ளார். இன்றைக்கு எடப்பாடியார் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், பொதுச்செயலாளர் என்று படிப்படியாக உயர்ந்து உள்ளார். மக்கள் தீர்ப்பே, மகேஷன் தீர்ப்பு என்பது போல எடப்பாடியார் 2026 ஆண்டில் முதலமைச்சர் வருவார் என கூறினார்.