மாணவர்களின் தனித்திறமையை படைப்பாற்றலை மேம்படுத்தும் விதமாக நிறைய விடயங்களை செய்து கொடுப்பேன்.


Dr Radhakrishnan Award: குடியரசு முன்னாள் தலைவரும் ஆகச் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆசிரியர் தினம் நேற்று (செப்.5) கொண்டாடப்பட்டது. இதற்கிடையே தன்னிகரற்ற வகையில், தனித்துவமாகச் செயல்பட்டும் வரும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் இந்தப் பெயர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று மாற்றப்பட்டது. சென்னை வண்டலூரில் ஆசிரியர் தின நிகழ்வும் விருது விழாவும் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டு, விருதுகளை வழங்கினார்.  பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெறும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஸ், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


375 விருதுகள்


தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில், சிறந்த பள்ளிகள், ஆசிரியர்கள் என இரு பிரிவுகளில் மொத்தம் 375 விருதுகள் வழங்கப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 11 நபர்கள் மாநில நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளனர். எல்.கே.பி., நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் மு.தென்னவன், இளமனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மு.மகேந்திர பாபு, டி.கல்லுப்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆ.டேவிட், கருங்காலக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை பெ.நித்யாதேவி, மங்களக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலலைப் பள்ளி ம.ராஜாத்தி, விரகனூர் அரசு உயர்நிலைப் பள்ளி ச.சாந்தி, திருமங்கலம் முகமதுஷாபுரம் நகராட்சி துவக்க பள்ளி எஸ்.விஜயலட்சுமி,  க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி க.ராஜேந்திரன், ஞானஒளிபுரம் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி கு.பிரிட்டோ இனிகோ, உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ந.அருணாசலம், கள்ளிக்குடி கூடக்கோவில் நாச்சியப்பன் நாடார் துவக்க பள்ளி செந்தில்வேல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றுள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் விருதுபெற்ற சில ஆசிரியர்களிடம் பேசினோம்.


 கணிதபாடம் எளிமை


ஆசிரியர் பிரிட்டோ இனிகோ...........,” நான் கணித ஆசிரியராக 33 ஆண்டுகளாக பணி செய்கிறேன். அரசுப் பள்ளியில் 20 ஆண்டுகளாக பணி செய்கிறேன். நான் பணி செய்த பல இடங்களில் கணித பாடத்தில் 100% ரிசல்ட் காண்பித்துள்ளேன். கணித பாடம் கடினமானது என்ற எண்ணத்தை மாணவர்களிடமிருந்து நீக்கி, கணித பாடத்தினை எளிமையாக கற்றுக் கொடுப்பேன். இதனால் மாணவர்கள் எளிமையாக கணக்கு பாடத்தை புரிந்து கொண்டு கணக்கு பாடத்தில் வெற்றியை எட்டுகின்றனர். பல மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கணக்கில் எடுக்க வைத்துள்ளேன். மாணவர்களின் பின்புலத்தை அறிந்து, குடும்ப சூழலை உணர்ந்து, நாம் அவர்களுக்கு இறங்கி சொல்லிக் கொடுக்கும் போது எந்த பாடத்தையும் எளிமையாக கற்றுக் கொள்வார்கள்” என்றார்.


பள்ளி இடைநிறுத்தத்தில் கவனம்


தலைமை ஆசிரியர் சாந்தி...,”விரகனூர் பள்ளியில் 100 மாணவர்கள் இருந்த சூழ்நிலையில் தற்போது 331 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதற்கு கடின உழைப்பினை மேற்கொண்டோம். அரசிடம் போதுமான ஆசிரியர்களையும் பெற்றோம். இதனால் மாணவர்கள் தொடர்ந்து நல்ல படித்துக் கொண்டு வருகின்றனர். நான் பெண்ணுரிமைக்காக மிகவும் முக்கியத்துவம் கொடுத்து என்னுடைய மாணவர்களிடம் பேசுவேன். எங்கு சென்றாலும் பெண்ணுரிமையை முதன்மையாக எடுத்துக் கூறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இடை நீக்கம் உள்ள மாணவர்களை அவர்கள் வீட்டுக்கே சென்று அவர்களுக்கு அறிவுரை வழங்கி பள்ளிக்கு வர வைத்து விடுவேன். அதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் படிப்பார்கள். என் வாழ்க்கையில் ஒரே ஒரு மாணவரை தவிர மற்ற எல்லா மாணவர்களையும் இடைநீக்கம் இல்லாமல் படிக்க வைத்து விட்டேன். இதனை நான் பெரிய சாதனையாக கருதுகிறேன்” என்றார்.


இயற்கையும் - இலக்கியமும்


ஆசிரியர் மகேந்திர பாபுவிடம் ..,” எனக்கு இயற்கை சார்ந்து மாணவரிடம் கடத்துவது மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு மரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். அதே போல் மாணவர்களின் தனித்திறமையை படைப்பாற்றலை மேம்படுத்தும் விதமாக நிறைய விடயங்களை செய்து கொடுப்பேன். அதனால் என்னிடம் மாணவர்கள் நண்பர்களைப் போல பழகுவார்கள். மேலும் மாணவர்களுக்கு இலக்கியத்தை மிகவும் பொறுப்பாக சொல்லிக் கொடுப்பேன். அதனால் இலக்கிய ஆர்வம் உள்ள மாணவர்களும் என்னுடன் அதிகம் பயணிக்க நினைப்பார்கள். 25 ஆண்டு காலங்களாக இந்த ஆசிரியர் பணியில் இருக்கிறேன் எனக்கு மாநில நல்லாசிரியர் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.