மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் சுவர் இடிந்து விழுந்து இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் உயிரிழந்ததனர். இது குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
மழையில் சுவர் இடிந்து விழுந்தது.
 
மதுரை திருப்பரங்குன்றம் அருகே வளையன்குளம் கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அம்மா பிள்ளை (வயது 65) இவரது, பேரன் வீரமணி (வயது 10) மற்றும் அருகில் உள்ள வீட்டில் இருந்த பெண் வெங்கட்டி (வயது55) என்பவர் இரவு ஏழு மணி அளவில் பேசிக் கொண்டிருந்தனர். மாலை 6 மணி முதல் மின்தடை ஏற்பட்டதால்  அம்மா பிள்ளை - வீட்டின் வாசலில் அருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மழை பெய்து கொண்டிருந்த போது, திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வெங்கட்டி மற்றும் அம்மா பிள்ளை அவரது பேரன் வீரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
 
சிகிச்சைக்கு அனுமதி
 
 அதனை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனைவரையும் வலையன் குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து சிறுவன் வீரமணி மற்றும் அம்மா பிள்ளை ஆகிய இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வலையன் குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வெங்கட்டி அங்கேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சுவர் இடிந்து விழுந்த  விபத்தில் பலியான வெங்கட்டி உடலை உடற்கூறு ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர்  பலி
 
மேலும் படுகாயம் அடைந்த அம்மா பிள்ளை, சிறுவன் வீரமணி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிறுவன் வீரமணியும் அவரது பாட்டி அம்மா பிள்ளையும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள். வலையங்குளம் பகுதியில் மழையினால் சுவர் இடிந்து விழுந்து விபத்தில் இரு பெண்கள் மற்றும் சிறுவன் உள்பட மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரையில் தொடர் மழை
 
மதுரையில் கடந்த சில நாட்களா மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் கடுமையான காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் குறைந்து ஆங்காங்கே வயல்வெளிகள் மற்றும் கண்மாய்களில் தண்ணீரை காணமுடிகிறது என்பதும் குறிப்பிடதக்கது.