மதுரையில் பெய்த கனமழையால் வேளச்சேரி போல மாறிய மதுரை செல்லூர் பகுதி 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் நீரில் மூழ்கியது. வீடுகளுக்குள் இடுப்பளவுக்கு தண்ணீர் சென்றதால் பொருட்கள் வீண் ஆனது.

 

வெள்ளநீரில் சிக்கியது

 

மதுரை மாநகரில் நேற்று இரவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மதுரை செல்லூர் கண்மாய் நிரம்பி பந்தல்குடி கால்வாய் வழியாக  வெள்ள நீர் சென்ற நிலையில் பந்தல்குடி கால்வாய் முறையாக தூர்வாரப்படாத நிலையில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகளால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. மதுரை செல்லூர் கட்டபொம்மன் நகர் வாஞ்சிநாதன் தெரு, 50 அடி சாலை, பெரியார் தெரு, காமராஜர்தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்தது இதனால் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் இடுப்பளவிற்கு வெள்ள நீர் சென்றதால் அங்கிருந்து பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். திடீரென இரவில் வெள்ளம் புகுந்ததால் வீடுகளுக்குள் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் புத்தகங்கள் உள்ளிட்டவை வெள்ள நீரில் சிக்கியது. 

 


கோ.தளபதியை சரமாரியாக கேள்வி எழுப்பினர் 


 

இதனைத்தொடர்ந்து வெள்ள நீரானது அடுத்தடுத்த பகுதிகளுக்கும் சென்ற நிலையில் செல்லூர் பகுதி முழுவதிலும் வெள்ள நீரில் மூழ்கி சென்னை வேளச்சேரி மழைக்காலங்களில் இருப்பது போல மாறியது. மேலும் கட்டபொம்மன் நகர் வாஞ்சிநாதன் தெரு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் முழுமையாக சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடுவதாக கூறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி நேரில் வந்து பிரதான சாலையில் நின்று இரண்டு நிமிடம் பார்த்து சென்றார். அப்போது அவரை சந்திக்க வந்த பெண்களிடம் பேசிக்கொண்டிருந்தபோதே குறைகளை கேட்காமல் அவசர அவசரமாக புறப்பட்டு சென்றதால் அங்கு கூடியிருந்த பெண்கள் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதியை சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஓட்டு கேட்பதற்கு மட்டும் தெருத்தெருவாக வந்தீர்கள் தற்போது வர மறுப்பது ஏன் எனவும் போட்டோ சூட் நடத்துவதற்காக வந்தீர்களா ? உங்களுக்கு பாதிக்கப்பட்ட பகுதியை பார்க்காமல் அப்படியே நின்று விட்டு செல்கிறீர்கள் உணவு கூட சாப்பிடாமல் இருக்கிறோம். என்ன பிரச்சனை என்பது குறித்து கூட கேட்க மாட்டீர்களா என எம்எல்ஏவை பார்த்து சரமாரியாக பெண்கள் கேள்வி எழுப்பியதால் பதட்டமடைந்த கோ. தளபதி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

 

பொருட்கள் அனைத்தும் வீணாகிவிட்டது

 

இது தொடர்பாக அப்பகுதி மக்கள்  பேசியபோது, பந்தல்குடி கால்வாயை தூர்வார மழைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே கோரிக்கை மனு அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் ஒருநாள் மழைக்கே இதுபோன்று வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. தங்கள் வீடுகளுக்குள் உள்ள பொருட்கள் அனைத்தையும் வீணாகி விட்டதால் தண்ணீர் உணவு கூட இல்லாமல் தவித்து வருகிறோம் என வேதனையை வெளிப்படுத்தினர். தேர்தல் நேரத்தில் மட்டும் தெருத்தெருவாக வந்து வாக்கு கேட்க வந்தவர்கள் தற்போது பாதிக்கப்பட்ட பகுதியை கூட எட்டிப் பார்க்காமல் சென்று விட்டார் என தங்களது மன வேதனையை கொட்டித் தீர்த்தனர்.