மதுரையில் மேம்படுத்தப்பட்ட ரயில்நிலையப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

மேம்பாடு அடையும் மதுரை ரயில்நிலையம்

தென்மாவட்டங்களில் முக்கிய நகரமான மதுரைக்கு, வடமாநில பயணிகள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக மீனாட்சியம்மன்கோயில், பிள்ளையார்பட்டி, ராமேஸ்வரம், அழகர்கோயில் உள்ளிட்ட முக்கிய ஸ்தலங்களுக்கு மதுரை ரயில்நிலையம் பெரிதும் உதவுகிறது. இந்நிலையில் மதுரை ரயில்நிலையப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்

 அதே போல் மதுரை கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூபாய்  292.52 கோடி செலவில் ஒரு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் காரைக்குடி, சோழவந்தான், மணப்பாறை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு மார்ச் மாதம் முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. தற்போது பழனி, பரமக்குடி, அம்பாசமுத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று புதிய நவீன வசதிகளுடன் பயணிகள் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது.
 
மதுரை ரயில் நிலையப் பணிகள்
 
மதுரை ரயில் நிலையம் இரு நுழைவாயில்களுடன் மூன்று மாடி ரயில் நிலைய கட்டடம், பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் சுரங்கப்பாதை, ரயில் பாதை மேற்புற பகுதியில் 42 மீட்டர் அகல பயணிகள் தங்குமிடம், 37 மின் தூக்கிகள், 27 மின் ஏணிப்படிகள், நடை மேம்பாலங்கள், பல்லடுக்கு வாகன காப்பகங்கள், ஆகிய நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில்  மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது கிட்டதட்ட 60% பணிகள் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. ரயில்நிலையத்திற்கு முன்பாக மதுரை கோயில் நகரம் என்பதை பறைசாற்றும் விதமாக கோயில் கோபுர அமைப்பு ஒன்றும் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மதுரை ரயில்நிலைய மேம்பாடு, தென்மாவட்ட பயணிகளுக்கு மிகவும் பயனாக அமையும். ஒரு முன்மாதிரியான ரயில்நிலையம் எனவும் பெயர் எடுக்க வாய்ப்புள்ளது. தற்போது மதுரையில் மேம்படுத்தப்பட்ட ரயில்நிலையப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
தென்மாவட்டங்களில் நடைபெறும் மற்ற பணிகள்
 
திருநெல்வேலி - திருச்செந்தூர் பகுதியில் அனைத்து ரயில் நிலையங்களிலும் 24 ரயில் பெட்டிகள் நிறுத்தும் வகையில் நடைமேடைகள் நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 19 ரயில் நிலையங்களிலும் நடைமேடை நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 3 ரயில் நிலையங்களில்  நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் 8 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 2 ரயில் நிலையங்களில் கூடுதல் நடை மேடை மேற்கூரை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும் 25 ரயில் நிலையங்களில் கூடுதல் நடை மேடை மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மின் தூக்கி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் ரயில் நிலையத்தில் 4 குளிர் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 14 ரயில் நிலையங்களில்  குளிர் குடிநீர் இயந்திரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜபாளையம் - சங்கரன் கோவில் இடையே சோழபுரம் மற்றும் கரிவலம்வந்தநல்லூர் ஆகிய இரண்டு புதிய ரயில் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளது. கடந்த நான்கு மாதங்களில் சரக்கு ரயில்கள் மூலம் 9.91 லட்சம் டன் சரக்குகள் கையாளப் பட்டுள்ளது" என்பதும் குறிப்பிடதக்கது.
 
மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் மேம்பாட்டு பணிகளை சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.