தற்போதுவரை 30% மேல் கிட்டததட்ட 50 சதவீதம் நெருங்கும் வகையில் மதுரை ரயில் நிலையப்பணிகள் முடிந்துள்ளது.
மதுரை ரயில்நிலையத்திற்கு 51 ஆயிரத்திற்கும் மேல் பயணிகள் வந்து செல்கின்றனர்
கோயில் நகரமாக பார்க்கப்படும் மதுரைக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகின்றனர். மதுரைக்கு வந்து செல்ல ரயில் சேவை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதனால் தென்னக ரயில்வேயில் மிகவும் பிசியான ரயில்வே ஸ்டேஷனாக மதுரை ரயில் நிலையம் விளங்குகிறது. மதுரை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் 96 ரயில்கள் கடந்து செல்கின்றது. இதனால் ஒரு நாளைக்கு சுமார் 51 ஆயிரம் மேற்பட்ட பயணிகள் மதுரை ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அதிகளவு மக்கள் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்து செல்வதால் இதனை உலக தரத்தில் உயர்த்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பயணிகளை கவரும் வண்ணம் கட்டடம் கட்ட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
ரூ.347 கோடி செலவு - பெரியார் நிலையத்திற்கு சுரங்கம்
இதற்காக ரூ.347 கோடி செலவில் திட்ட மதிப்பு துவங்கப்பட்டு 36 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என முனைப்போடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 50 சதவீதங்களை நெருங்கும் அளவிற்கு மதுரை ரயில்வே ஜங்ஷன் பணியானது நிறைவடைந்து வருகிறது. மதுரை ரயில்வே ஜங்ஷனில் கிழக்கு மற்றும் மேற்கு பாதை வழியாக வந்து செல்லும் வகையில் இரண்டு முனையம் அமைக்கப்படுகிறது. மூன்றடுக்கு வாகன நிறுத்த வசதிகளும் செய்யப்படுகிறது. அதேபோல் மதுரை ரயில் நிலையத்திலிருந்து அருகே உள்ள பெரியார் பேருந்து நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமையும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்படும். மேம்படுத்தப்பட்ட டிக்கெட் கவுண்டர்கள், ரயில்வே அலுவலர்கள் தங்கும் வசதி, பார்சல் வைத்து கொண்டு செல்லும் வசதி என நவீனமுறையில், உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மதுரை ரயில் நிலையம் மாற உள்ளது.
கோயில் கோபுரம் வடிவில் கிழக்கு நுழைவுவாயில்
ரயில் நிலையத்தில் கிழக்கு முனையமானது 22 ஆயிரத்து 576 சதுர மீட்டரில் மதுரையின் பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக கட்டப்படுகிறது. அதாவது கோயில் கோபுரம் அமைப்பில் இந்த கிழக்கு முனையம் அமைய உள்ளது. அடித்தளத்தில் பயணிகள் வருகை மற்றும் புறப்படும் இடங்கள் தனியாக அமைக்கப்படுகிறது. அதே போல் கீழ் தளத்தில் கழிப்பறை வசதி, நேர காப்பாளரின் அறை, குழந்தைகள் பாதுகாப்பு அறை, உதவி மையம், அவசர தேவைக்கு பெட்டிக்கடையும் அமையவுள்ளது.
மதுரை ரயில்நிலையம் எப்போது தயாராகும்
அதேபோல் முதல் தளத்தில் பயணிகள் அமரும் அறை, ரெஸ்டாரண்டுகள், சிறிய கடைகள் உள்ளிட்டவைகள் அமையும். அதே போல் இரண்டாவது தளத்தில் முழுக்க வணிகம் சார்ந்த இடங்கள் அமைய உள்ளது. அதேபோல் மேற்கு நுழைவாயிலில் டிக்கெட் கவுண்டர்கள் ரயில்வே அலுவலகங்கள் என முனையம் மேம்படுத்தப்பட்டு இருக்கும். பார்க்கிங் வசதியை பொறுத்தமட்டில் கார்பார்க்கிங் கிழக்கு பகுதியில் 9430 சதுர மீட்டரும், மேற்கு கார் பார்க்கிங் 2580 சதுர மீட்டரும் அமையும். கிழக்குப் பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 2822 சதுர மீட்டர் பைக் பார்க்கிங் வசதி அமையவுள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போதுவரை 30% மேல் கிட்டததட்ட 50 சதவீதம் நெருங்கும் வகையில் மதுரை ரயில் நிலையப் பணிகள் முடிந்துள்ளது. 2026 ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.