தன் கையால் நட்ட மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டதால் நொறுங்கிபோன இளைஞரின் இதயம்.

மரங்களின் காதலன்
 
மதுரை மாநகர் முத்துப்பட்டி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி - ஜெகநாதன் தம்பதியினரின் மூத்த மகனான ஜெகதீஷ்குமார். தந்தை இல்லாத நிலையில் தாயின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் ஜெகதீஸ்குமார். சிறு வயது முதலே மரக்கன்றுகளை நடுவது மரங்களை பராமரிப்பது, பொது இடங்களில் உள்ள மரங்களை காய்ந்து போக விடாமல் காப்பாற்றுவது என எப்போதும் மரம் செடிகள் என வாழ்ந்து வந்துள்ளார். பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவயதில் இருந்தே எங்கு சென்றாலும் கையில் மரக்கன்று மண்வெட்டி, கம்பியோடு செல்வார். மேலும் உயிரினங்கள் மீதும் அதீத பாசம் வைத்திருந்த ஜெகதீஷ் குமார் மதுரை மாநகர் முத்துப்பட்டி, பாண்டியன் நகர், டிவிஎஸ் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதிலும் நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வரிசையாக மரக்கன்றுகளை நட்டு நாள்தோறும் தண்ணீர் ஊற்றி மரமாக வளர்த்துவந்துள்ளார்
 
மரமே மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
 
தாயாரின் பராமரிப்பில் வளர்ந்த ஜெகதீஷ் குமார் திருமணம் செய்ய வேண்டும் என தாயார் கூறியபோதும் எனக்கு மரம் செடி வளர்ப்பு, பசுமையான சூழலை உருவாக்கம் என்பது தான் லட்சியம் திருமணம் வேண்டாம் என தவிர்த்து மரம் செடிகளுக்காவே வாழ்ந்து வந்துள்ளார். பொதுமக்கள் வந்துசெல்லும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வந்துள்ளார். ஓட்டுனராக பணி புரிந்தாலும் தனது வண்டிகளிலும் எப்போதும் மரக்கன்றுகளை வைத்திருப்பார் எங்கெல்லாம் வண்டியை நிறுத்துகிறாரோ அங்கெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வைத்து தினசரி பராமரித்து வந்துள்ளார். காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை எப்போது பார்த்தாலும் மரம் செடிகள் என மரங்களின் காதலனாக இருந்து வந்த ஜெகதீஷ் குமாருக்கு அந்த மரமே மரணத்திற்கு காரணமாக மாறியுள்ளது.
 
நடவடிக்கை எடுக்க புகார்
 
மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் ஜெகதீஷ் குமார் சிறுவயதில் நட்டு வைத்த மரமானது. அப்பகுதி மக்களுக்கு நிழல் தந்து வந்த நிலையில் திடீரென கடந்த வாரம் வேரோடு மரங்கள் பிடுங்கி கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது குறித்து அருகில் உள்ளவர்களிடம் ஏன் மரத்தை வேரோடு சாய்த்தீர்கள் என கேள்வி எழுப்பிய போது வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து தனது சமூகவலைதளத்திலும் வீடியோ பதிவிட்டுள்ளார். தான் சிறுவயதில் வைத்த மரங்கள் வேரோடு  பிடுங்கப்பட்ட மரங்கள் வீசப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று மரங்கள் வெட்டி கிடப்பதை பார்த்து இதயம் நொறுங்கிப் போன ஜெகதீஷ் குமார்  மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.
 
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
 
இந்நிலையில் விசாரணைக்காக வந்த காவல்துறையினர் இதெல்லாம் ஒரு பிரச்சனையா தம்பி என  பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஜெகதீஷ் குமாரிடம் விசாரணை என்ற பெயரில் ஆவணங்களை எடுத்து வர கூறிய அடுத்த நொடியில் ஏற்கனவே மரங்களை வேரோடு பிடுங்கியதால் இதயம் நொறுங்கி காணப்பட்ட ஜெகதீஷ் குமார் தன் வீட்டிலிருந்து செடிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தை குடித்துள்ளார். அப்போது அங்கு இருந்த சிலர் ஜெகதீஷ் மருந்தை குடிக்கிறார் என காவல்துறையினருக்கு சொன்ன போதும் அவர் மோர் குடிக்கிறார் என அலட்சியமாக கூறியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து அவர் மயங்கிய போது தான் காவல்துறையினர் அவரை மீட்டு ஆட்டோ மூலமாக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில  நாட்களாக சிகிச்சையில் இருந்த ஜெகதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
 
தான் இறந்தாலும் தன் உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதற்காக உடல் உறுப்பு தானம் அளித்திருந்த ஜெகதீஷ் குமார் விஷ மருந்து அருந்த உயிரிழந்ததால் உடல் தானம் செய்ய முடியாத நிலையில் இரு கண்களை மட்டும் தானமாக கொடுக்க தாயார் சம்மதம் தெரிவித்தார். இதன்காரணமாக மரங்களின் காதலன் ஜெகதீஷ் குமார் கண்களை தானமாக கொடுத்து வாழ்வளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.