மதுரை மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் அகில இந்திய அளவிலான “சரஸ் மேளா” நடைபெற உள்ளதை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சரஸ் மேளா நிகழ்ச்சி விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், துவக்கி வைத்தார்.

சரஸ் மேளா
 
மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவிக்கையில்...,”  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு ஏதுவாக ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய அளவில் “சரஸ் மேளா” நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் மதுரை தமுக்கம் மைதானத்தில் 22.11.2025 முதல் 03.12.2025 வரை 12 நாட்கள் நடைபெறவுள்ளது. சுய உதவிக் குழுக்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு நிறைய முன் மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்தில் கிட்டத்தட்ட பல இலட்சம் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கியிருக்கிறோம். குறிப்பாக ஆவின், கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் இந்த அடையாள அட்டைகளை காண்பித்தால் தள்ளுபடி வழங்குதல். ஊரகப் பகுதிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு பேருந்துகளில் பயணம் செய்வதற்கு சலுகைகள் வழங்குதல் போன்ற செயல்களை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
 
12 நாட்கள் கண்காட்சி
 
ஆண்டிற்கு ஒருமுறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட பொருட்களுக்கு ஒரு மேடை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மிகப்பெரிய கனவு உள்ளது. தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வைத்து சென்னையில் மாபெரும் கண்காட்சி அமைக்கப்பட்டது. இக்கண்காட்சியில் வடக்கு மாநிலம் மற்றும் தெற்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மதுரையில் இத்தகைய மாபெரும் கண்காட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் 22.11.2025 முதல் 03.12.2025 வரை 12 நாட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
 
200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும்
 
மற்றும் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் துவக்கி வைக்கப்பட உள்ளது. 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொருட்கள், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பொருட்கள், தஞ்சாவூர் பொம்மைகள், இராமநாதபுரம் மாவட்ட கடலோர பொருட்கள் போன்றவை இக்கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. மேலும் உணவு திருவிழாவில் திண்டுக்கல் பிரியாணி, கோயம்புத்தூர் வெள்ளை மட்டன் பிரியாணி, ஜிகர்தண்டா போன்ற உணவுப்பொருட்கள் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் நேரடியாக தயாரிக்கப்பட்டு கண்காட்சி வைக்கப்படவுள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற்று சுய உதவி உறுப்பினர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.