ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகப் புதிய கட்டடம் மற்றும் ரூ.19.90 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி தத்தனேரி மற்றும் கோச்சடையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலைத்தை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திறந்து வைத்தார்.
ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வட்டாசியர் அலுவலகம்
மதுரை மாவட்டம், சின்ன சொக்கிகுளத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா இன்று (22.08.2026) நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தலைமை வகித்தார். எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டு புதிய அலுவலகக் கட்டடத்தைத் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அ.கல்லாணை, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.கோபிசன், மதுரை மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தத்தனேரி மற்றும் கோச்சடையில் இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலையம்
பொதுப்பணித்துறை மூலம் 1,252 சதுர மீட்டர் பரப்பளவில் அனைத்து நவீன உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் விசாலமான காத்திருப்பு அறை, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் மற்றும் கோப்புப் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்புதிய அலுவலகம் மூலம் மதுரை வடக்கு வட்டாரப் பொதுமக்களுக்குப் பட்டா மாறுதல், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள், சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு வருவாய்த்துறை சேவைகள் விரைவாகவும் தடையின்றியும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரூ.19.90 கோடி மதிப்பீட்டில் மதுரை மாநகராட்சி தத்தனேரி மற்றும் கோச்சடையில் இரண்டாம் கட்ட திடக்கழிவு இடமாற்றும் நிலையம்.
தத்தனேரி மற்றும் கோச்சடை 2 புதிய திடக்கழிவு இடமாற்றும் நிலையங்கள்
மதுரை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், தத்தனேரி மற்றும் கோச்சடை பகுதிகளில் ரூ.19.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய திடக்கழிவு இடமாற்றும் நிலையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இம்மையங்கள் மூலம் 51 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் நவீன இயந்திரங்களின் உதவியுடன் அழுத்தப்பட்டு, நாளொன்றுக்கு மொத்தம் 400 டன் வரை வெள்ளக்கல் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். இதன் மூலம் மாநகரப் பகுதிகளில் குப்பைகள் தேங்குவது தவிர்க்கப்பட்டு, தூய்மையான மற்றும் சுகாதாரமான மதுரை மாநகரை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் க.அன்பழகன் அவர்கள், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் ஜெய்னுலாப்தீன், ராஜாராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பார்த்திபன், மதுரை வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்(பொ) காமராஜ், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
