உசிலம்பட்டியில் குடும்ப வறுமைக்காக பள்ளி படிப்புடன் பால் கறவைப் பணி செய்து வந்த பள்ளி மாணவன் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


தனது சகோதரிக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் குடும்ப வறுமைக்காக பால் கறவைப் பணி செய்து வீட்டை வழிநடத்தி வந்த பள்ளி மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய செம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அழகுராஜா மகன் ரூபன். உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை அழகு ராஜா கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில் குடும்ப வறுமையின் காரணமாக காலை, மாலை நேரங்களில் பால் கறவைப் பணி செய்து குடும்பத்தை வழி நடத்தி கொண்டே பள்ளிக்கும் சென்று வந்தாக கூறப்படுகிறது.



 

இந்நிலையில் இன்று காலை பால் கறவைப் பணி செய்துவிட்டு பாலை உசிலம்பட்டியில் உள்ள பண்ணையில் ஊற்ற பெரிய செம்மேட்டுப்பட்டியிலிருந்து உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது, கொக்குடையான்பட்டி எனும் இடத்தில் அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றதாகவும்,  அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் ரூபன் இயக்கி வந்த இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அரசு பேருந்திற்குள் சிக்கி விபத்துள்ளானது.,



 

இதில் படுகாயமடைந்த ரூபன் மற்றும் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த எழுமலையைச் சேர்ந்த விஷ்ணு என்ற இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில் ரூபன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விஷ்ணுவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் ரூபனின் உடலை மீட்டு உடற் கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடுத்த வாரம் தனது சகோதரிக்கு நடைபெறும் திருமண ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில் குடும்ப வறுமைக்காக பால் கறவைப் பணி செய்து வீட்டை வழிநடத்தி வந்த பள்ளி மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.